காங்கிரஸ் உட்கட்சித் தேர்தல் தொடர்பாக, தேர்தல் அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம்,மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சென்னை சத்யமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது. பின்னர், செய்தியாளர்களிடம் கே.எஸ்.அழகிரி கூறியதாவது: தமிழக காங்கிரஸின் உட்கட்சித் தேர்தல் ஜூன் 10-ம் தேதி தொடங்குகிறது. இது தொடர்பான வரைவு அறிக்கையை மாநில தேர்தல் அதிகாரி கவுரவ் கோகாய் வழங்கி உள்ளார்.
தேர்தலைப் பார்வையிடுவதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிராமாநிலங்களில் இருந்து பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தேர்தல் மூலமாக தமிழகத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் காங்கிரஸ் கட்சியின் அமைப்புகள் மீண்டும் உருவாக்கப்பட உள்ளன. வாக்குச்சாவடி அளவில் இருந்து, தேசிய அளவிலான பொறுப்பு வரை தேர்தல் மூலம் நிரப்பப்படும்.
தமிழ்நாடு காங்கிரஸில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வாக்களிக்கத் தகுதி உள்ளவர்கள். மாநிலத் தலைவர் தேர்தல் ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள்அன்றைய தினமே அறிவிக்கப்படும். மாநிலத் தலைவர் பதவியை பெண்களுக்கு ஒதுக்கும் திட்டமும் உள்ளது.
மத தீவிரவாதத்துக்கோ, அரசியல் தீவிரவாதத்துக்கோ காங்கிரஸ் ஒருபோதும் துணை போகாது. முற்றிலும் மகாத்மா காந்தியின் போதனைகளைப் பின்பற்றி, தனது அரசியல் வாழ்க்கையை நடத்தி வருகிறார் ராகுல் காந்தி. அவர் நினைத்திருந்தால், ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில்பிரதமராக வந்திருக்க முடியும். அந்த இடத்தை விட்டுக்கொடுக்க மன்மோகன் சிங் தயாராக இருந்தார். அப்போதும் ராகுல்காந்தி அந்தப் பொறுப்பை விரும்பவில்லை.
2014-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தபிறகு, அதற்குப் பொறுப்பேற்று தனது பதவியைத் துறந்தார். அரசியலில் பதவியைத் துறப்பது சாதாரண விஷயம் இல்லை. காங்கிரஸோ, ராகுல் காந்தியோ எதற்காகவும் இடதுசாரி பக்கமோ, வலதுசாரி பக்கமோ நிற்பதில்லை. தமிழகத்தில் நிச்சயம் காமராஜர் ஆட்சிஅமையும். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
மாநில தேர்தல் அதிகாரியும், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவருமான கவுரவ் கோகாய் எம்.பி. பேசும்போது, ‘‘நாடு முழுவதும் கட்சிக்கு புத்துயிரூட்ட உட்கட்சித் தேர்தல் நடைபெறுகிறது. வாக்குச்சாவடி அளவில் இருந்து காங்கிரஸ் அமைப்பை வலுப்படுத்த உள்ளோம். 2024 மக்களவைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’’ என்றார்.
இந்த நிகழ்ச்சியில், காங்கிரஸ் தேசியச் செயலர் வல்ல பிரசாத், மாநில முன்னாள் தலைவர்கள் கே.வீ.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர், ஜெயக்குமார் எம்.பி., தேசியமகளிரணிச் செயலர் அசீனா சையத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.