யுக்ரேனில் நடந்து வரும் படையெடுப்பு காரணமாக, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்துவதற்கான முடிவு என்பது ‘முட்டாள்தனம்’ என்றும், இது உலகளாவிய காலநிலை இலக்குகளை அடைவதற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் கூறியுள்ளார்.
யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, ரஷ்யாவிடம் இருந்து பெறப்படும் எரிவாயுகளை பிற நாடுகள் நிறுத்தியதை அடுத்து, நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விலைகள் கடுமையான உயர்வைக் கண்டுள்ளது.
ஆனால், இந்த புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தும் குறுகிய கால நடவடிக்கைகள் என்பது பாரிஸ் காலநிலை இலக்குகளின் நோக்கத்தை நிறைவேறவிடாமல் செய்யும் என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார்.
மேலும், 2040-க்குள் நிலக்கரி பயன்படுத்துவதை முழுவதுமாக கைவிட வேண்டும் என்று சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
COP26 பருவநிலை மாநாடுக்குப் பிறகு காலநிலை மற்றும் ஆற்றல் சம்பந்தமாக அவர் பேசியிருப்பது இதுவே முதல்முறை. ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடந்த கூட்டத்தில், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாப்பதற்கான முன்னேற்றங்கள் பெரிய அளவில் எட்டப்படவில்லை என்று கூறினார்.
புவி வெப்பமயமாதலால் ஏற்படும் சேதத்தின் அளவைக் கட்டுப்படுத்த, இந்த நூற்றாண்டில் உலக வெப்பநிலையின் உயர்வை 1.5°C க்கு கீழ் வைத்திருப்பது மிகவும் முக்கியமானது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
அந்த வரம்பை மீறாமல் இருக்க, இந்த தசாப்தத்தின் முடிவில் கார்பன் வெளியீட்டை பாதியாக குறைக்க வேண்டும். மாறாக, குட்டேரஸ் சுட்டிக்காட்டியுள்ளபடி, உமிழ்வுகள் 14% உயரும் நிலை உள்ளது.
“கிளாஸ்கோ கூட்டத்தில் பிரச்னை தீர்க்கப்படவில்லை” என்று குட்டேரஸ், பொருளாதார நிலைத்தன்மை உச்சி மாநாட்டில் ஆற்றிய உரையில் கூறியுள்ளார்.
“உண்மையில், பிரச்னை மோசமாகி வருகிறது”
யுக்ரேனில் நடக்கும் போர் இந்தச் சூழலை மேலும் சிக்கலாக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
ஐரோப்பா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் இந்த ஆண்டு, ரஷ்ய எண்ணெய் மற்றும் எரிவாயு சார்ந்து இருப்பதை குறைக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றன. பல நாடுகள் மாற்று ஆற்றலுக்காக, நிலக்கரி பயன்படுத்தும் நடவடிக்கைகள் அல்லது திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியை செய்து வருகின்றன.
சில நாடுகளின், இந்த தற்காலிகமாக எடுக்கப்பட்டுள்ள முடிவு சுற்றுச்சூழலுக்கு ஆபத்து விளைவிக்கும் என்று நான் கருதுகிறேன் என்றும், “தற்போது எடுத்துள்ள முடிவால் புதைபடிவ எரிபொருள் விநியோகம் தொடரும் பட்சத்தில், அது புதைபடிவ எரிபொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான கொள்கை முடிவுகளை செயல்படுத்த விடாமல் செய்யும்” என்றும் கூறியுள்ளார்.
“புதைபடிவ எரிபொருட்களுக்கு பயன்படுத்துவது நிச்சயம் அழிவை ஏற்படுத்தும். இது முட்டாள்தனமான முடிவு” என குறிப்பிட்டிருக்கிறார்.
நாடுகள், “நிலக்கரி மற்றும் அனைத்து புதைபடிவ எரிபொருட்களை பயன்படுத்தாமல் நிறுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்” மற்றும் விரைவான மற்றும் நிலையான ஆற்றல் மாற்றத்தை செயல்படுத்த வேண்டும்.
இது தான் “ஆற்றல் பாதுகாப்பிற்கான ஒரே உண்மையான வழி.”
மேலும் அவர் கூறுகையில், பருவநிலை நெருக்கடிக்கான தீர்வுகள் பெரும்பாலும் G20 பணக்கார நாடுகள் குழுவின் கைகளில் உள்ளன, அவை உலக அளவில், உமிழ்வுகளில் 80% உற்பத்தி செய்கின்றன.
இதற்கு உதாரணமாக தென்னாப்பிரிக்காவின் விஷயத்தை அவர் கூறினார். COP26-இன் போது பிரிட்டன், அமெரிக்கா உட்பட பல நாடுகள், தென்னாப்பிரிக்காவின் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டுவர 850 கோடி டாலர்கள் நிதியளிப்பு திட்டத்திற்கு ஒப்புக்கொண்டன.
இந்தோனீசியா, வியட்நாம் மற்றும் பிற இடங்களில் இதேபோன்ற கூட்டணிகள் அமைப்பதற்கு இப்பொழுது சூழல் ஏற்பட்டுள்ளது என்று குட்டேரஸ் கூறியுள்ளார்.
காலநிலைப் பிரச்னையைத் தீர்ப்பதில் இருக்கும் சிக்கல்களில் பணம் முக்கியமான ஒன்றாகும். மேலும், அதிகரித்து வரும் வெப்பநிலைக்கு ஏற்றவாறு நாடுகள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ள, நிதியளிப்பில் பெரும் முன்னேற்றம் தேவை என்று குடெரெஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
இப்போது, உலகளவில் மூன்றில் ஒருவருக்கும், ஆப்பிரிக்காவில் பத்தில் ஆறு பேருக்கும், பேரழிவுகளுக்கான முன்கூட்டிய எச்சரிக்கை அமைப்புகள் இல்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டில், வளரும் நாடுகளுக்கு, ஆண்டுக்கு 10,000 கோடி டாலர்கள் வழங்குவதாக பணக்கார நாடுகள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் வாதிடுகிறார்.