டெல்லி உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் உள்ள காவேரி விடுதியில் மாணவர்களிடையே வன்முறை வெடித்தது. இந்த விவகாரத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் நேரடியாகத் தலையிட வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிகை விடுத்துள்ளது.
நேற்று (ஏப்ரல் 10) இரவு ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்தில் ராமநவமியைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதே நேரத்தில் காவேரி விடுதி உணவகத்தில் அசைவ உணவு வழங்குவது தொடர்பாக இரண்டு மாணவர் குழுக்களிடையே நடந்த மோதலில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் சார்பில் காவேரி விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட ராமநவமி பூஜையைக் காரணம் காட்டி, வாரயிறுதியில் அமைக்கப்பட்ட மெனுவின்படி அசைவ உணவுகளைச் சமைக்க ஏபிவிபி அனுமதிப்பதில்லை என்று இடதுசாரி மாணவர் குழு குற்றம் சாட்டியுள்ளது.
எந்தவொரு குழுவும் தங்களது உணவு விருப்பங்களை மற்றவர்கள் மீது திணிக்கும் எந்தவொரு முயற்சியும் கண்டிக்கத்தக்கது என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
மேலும், பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.பல்கலைக்கழகத்தின் பன்மைத்துவம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை போன்ற கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும் என்று ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.