Site icon ழகரம்

உள்நாட்டிலேயே தயாரித்த விக்ராந்த் கப்பல் கடற்படையில் அடுத்த மாதம் சேர்ப்பு

இந்திய கடற்படையில் ஏற்கெனவே இருந்த ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் கடந்த 1997-ல் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டது.

அதன்பின் அதே பெயரில் உள்நாட்டிலேயே இந்த கப்பல் 40,000 டன் எடையில் தயாரிக்கப்பட்டு வெள்ளோட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய ஐஎன்எஸ் விக்ராந்த் விமானம் தாங்கி போர்க்கப்பல் இந்திய கடற்படையில் அடுத்த மாதம் சேர்க்கப்படவுள்ளது.

இந்த விமானத்தில் பயன்படுத்த 24 முதல் 26 போர் விமானங்களை வாங்கும் பணியில் கடற்படை மும்முரமாக ஈடுபட்டுள்ளது. பிரான்ஸ் தயாரிப்பான ரபேல்-எம் ரக போர் விமானம் மற்றும் அமெரிக்க தயாரிப்பான எப்/ஏ-18ரக போர் விமானம் ஆகிய இரண்டில், ஐஎன்ஸ் விக்ராந்த் போர்க்கப்பலுக்கு எது பொருத்தமாக இருக்கும் என்ற பரிசோதனை கோவாவில் உள்ள பரிசோதனை மையத்தில் நடந்து வருகிறது.

அதன்பின் போர் விமானங்கள் கொள்முதல் நடவடிக்கை விரைவுபடுத்தப்படும் என இந்திய கடற்படை துணை தளபதி வைஸ் அட்மிரல் என்எஸ் கார்மேட் தெரிவித்துள்ளார்.

இந்திய கடற்படையில் தற்போது ஐஎன்எஸ் விக்ரமாதித்யா என்ற ஒரே ஒரு விமானம் தாங்கி போர்க்கப்பல் மட்டுமே உள்ளது. இந்த கப்பல் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டு கடற்படையில் கடந்த 2013-ம் ஆண்டு சேர்க்கப்பட்டது.

இதில் பயன்படுத்துவதற்கு 45, மிக்-29கே ரக போர் விமானங்கள் வாங்கப்பட்டன. ஆனால் இந்த போர் விமானங்களை, விக்ரமாதித்யா கப்பலில் இருந்து இயக்குவது பெரும் பிரச்சினையாக உள்ளது. சில விமானங்கள், கப்பலில் தரையிறக்கும் போது சேதம் அடைந்தன. ஒரு விமானம் கடலில் விழுந்தது. அதனால் புதிய விக்ராந்த் போர்க்கப்பலுக்கு பொருத்தமான போர் விமானத்தை பரிசோதிக்கும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றன.

Exit mobile version