திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், வெங்கத்தூர் கிராமத்தில் உள்ள வெங்கத்தூர் ஏரி நீர்வளத் துறையின் பராமரிப்பில் உள்ள ஏரியாகும். 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரியில் தேக்கப்படும் தண்ணீர், சுற்றியுள்ள பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பின் விவசாய தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது.
மேலும், சென்னையின் முக்கியகுடிநீர் ஆதாரமாகத் திகழும் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வெங்கத்தூர் ஏரியில் இருந்து கூவம் ஆறு வழியாக தண்ணீர் செல்கிறது..
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்து நீர் ஆதாரமாக திகழும் இந்தஏரி ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி 150 ஏக்கர் பரப்பளவாக சுருங்கிவிட்டது.அத்துடன், ஏரியைச் சுற்றி தொழிற்சாலைகளும் உருவானதால், அதிலிருந்து வெளியேறும் கழிவுகள் கலந்து வெங்கத்தூர் ஏரி மாசடைந்தது. இதனால், இந்த ஏரியில் அடிக்கடி மீன்கள் இறந்து வருகின்றன.
எனவே, இந்த ஏரியை தூர்வாரி, கரையை அகலப்படுத்த வேண்டும். நீர்வழிப் பாதைகளை சுத்தம் செய்துபராமரிக்க வேண்டும். சேதம் அடைந்துள்ள மழைநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும். ஏரியைச் சுற்றி வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை முற்றிலும் அழிக்க வேண்டும்.
ஏரிக்கரையில் நடைபாதை அமைக்க வேண்டும். ஏரியில் படகுசவாரி ஏற்படுத்துவதோடு, பொழுதுபோக்கு பூங்காவும் அமைக்க வேண்டும் என வெங்கத்தூர் நீர்நிலை, பசுமைப் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், தமிழக முதல்வர், ஆட்சியர்,நீர்வள ஆதாரத்துறையிடம் மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அனுப்பியுள்ள திருவள்ளூர், கொசஸ்தலையாறு வடிநிலக் கோட்ட செயற்பொறியாளர் சி.பொதுப்பணி திலகம், “வெங்கத்தூர் ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளைக் கண்டறிந்து அவற்றை அகற்றவும், எல்லைக் கற்களை நடவும், திருவள்ளூர் வட்டாட்சியரிடம் நில அளவைசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நில அளவை பணிகள் முடிந்து எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட உடன் அனைத்து ஆக்கிரமிப்புகளும் வருவாய்த் துறையோடு இணைந்து அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், ஏரியின் மேற்குப் பகுதியில் செல்லும் கூவம் ஆற்றின் குறுக்கே அதிகத்தூர் எல்லையில் புதிய தடுப்பணை அமைக்க விரைவில் அரசாணை பெறப்பட்டு தடுப்பணை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.
வெங்கத்தூர் ஏரியைத் தூர்வாரி ஆழப்படுத்துதல், கரைகளை பலப்படுத்துதல், வரவு மற்றும் மிகைநீர் கால்வாயை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள நகர குடிநீர் திட்டம் மற்றும் வெள்ளத் தடுப்பு திட்டத்தில் வெங்கத்தூர் ஏரியைச் சேர்க்க ஆவன செய்யப்பட்டுள்ளது.
வெங்கத்தூர் ஏரியைச் சுற்றி குடியிருப்பு பகுதிகள் அதிகமானதால் வீடுகளில் சேரும் கழிவுகள் ஏரியில் கலக்காமல் இருக்க, கழிவுகளை முறையாக வெளியேற்ற, ஊராட்சி அமைப்பிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.