செய்திகள்இந்தியா

புதுச்சேரியில் மார்ச் 29-ல் வாகனங்கள் ஓடாது: அனைத்து தொழிற்சங்கத்தினர் கூட்டாக அறிவிப்பு

முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் வரும் 29ம் தேதி அன்று புதுச்சேரியில் வாகனங்கள் ஓடாது என்று அனைத்து தொழிற்சங்கத்தினர் கூட்டாக அறிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் வரும் 28, 29ம் தேதிகளில் வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. புதுவையில் ஐஎன்டியூசி, ஏஐடியூசி, சிஐடியூ, தொமுச, எம்எல்எப், எல்எல்எப், ஏஐசிசிடியூ, ஏஐயூடியூசி, என்டிஎல்எப் ஆகிய தொழிற்சங்கங்கள் இணைந்து 28ம் தேதி வேலைநிறுத்தம், 29ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஐஎன்டியூசி மாநில தலைவர் பாலாஜி ரவிச்சந்திரன், ஏஐடியூசி பொதுச்செயலாளர் சேதுசெல்வம் ஆகியோர் கூறியதாவது:

கடந்த 7 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசு ஏழை எளிய மக்களுக்கு எதிராகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் உள்ளது. தேசிய சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக தாரை வார்க்கப்பட்டு வருகிறது. வங்கிகளின் வராக்கடன் ரூ.13 லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அரசின் பொருளாதார நடவடிக்கையால் அத்தியாவசிய பொருள் விலை உயர்வு, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, வேலையிழப்பு, சம்பள வெட்டு ஆகியவை உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழலில் தேசத்தை காப்போம், மக்களை காப்போம் என்ற முழக்கத்தோடு நாட்டின் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து 28, 29ம் தேதிகளில் நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. புதுவையில் வேலை நிறுத்தத்தோடு 29ம் தேதி முழு அடைப்பு போராட்டமும் நடக்கிறது. அன்றைய தினம் 11 இடங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். இந்த போராட்டத்துக்கு அனைத்து அரசியல் கட்சியினர்,தொழிற்சங்கங்களிடம், வர்த்தக நிறுவனங்களிடமும் ஆதரவு கேட்டுள்ளோம்.

எங்கள் தொழிற்சங்கங்களிடம் அதிகளவு வாகன போக்குவரத்து சங்கம் உள்ளது. இதனால் முழு அடைப்பு அன்று வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபட்டிருக்கும். அன்றைய தினம் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்க கோரியுள்ளோம். போராட்டத்தில் யாரையும் வலுக்கட்டாயமாக அடைக்க வேண்டும் என வலியுறுத்த மாட்டோம்” என்றனர்.

அன்றைய தினம் பொதுத்தேர்வு எழுத உள்ளோருக்கு திருப்புதல் தேர்வு உள்ளதே என்று கேட்டதற்கு, “தேச நலனுக்காக நடைபெறும் போராட்டத்தால் ஒரு சிலர் பாதிக்கக்கூடும். அவற்றை பொறுத்துத்தான் ஆக வேண்டும்” என்று குறிப்பிட்டனர். பேட்டியின்போது தொழிற்சங்க நிர்வாகிகள் ஞானசேகரன், சொக்கலிங்கம், சீனுவாசன், அண்ணாஅடைக்கலம், மோதிலால், சங்கரன், சிவக்குமார், செந்தில், வேதாவேணுகோபால், மகேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button