Site icon ழகரம்

மாநகராட்சி, நகராட்சி எல்லைக்குள் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்றுமாறு ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தல்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கைகள் மீது நடைபெற்ற விவாதத்தில் பேசிய தமிழர் வாழ்வுரிமை கட்சித் தலைவர் தி.வேல்முருகன், “எல்லா தரப்பினரும் பாராட்டும் வகையில் நிதிநிலை அறிக்கைகள் அமைந்துள்ளன. அதனால் எதிர்க்கட்சியினரும் விமர்சனம் செய்ய முடியவில்லை.

தமிழகத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்களில் 3,000 பேர் பெண்கள். எனவே, கிராம நிர்வாக அலுவலகங்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும். மாநிலத்தில் சட்டத்துக்குப் புறம்பாக செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும்” என்றார்.

இதற்குப் பதில் அளித்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசும்போது, “சிதம்பரம் கோயில் பிரச்சினை தொடர்பாக 2013-ல் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அப்போதைய அரசு அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவில்லை. அதனால்தான் அந்த கோயில் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்வதற்காக வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட் டுள்ளது.

அக்கோயிலில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து கோயிலின் இணை ஆணையர் தலைமையில் ஆய்வு மேற்கொள் ளப்பட்டுள்ளது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசும்போது, “மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்கரியை டெல்லியில் சந்தித்து, மாநகராட்சி, நகராட்சிஎல்லையில் உள்ள சுங்கச்சாவடி களை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தினேன். அதன்படி 5 சுங்கச்சாவடிகள் அகற்றப்பட வேண்டும். இது தொடர்பாக நல்ல பதில் தருவதாக அமைச்சர் உறுதி அளித்துள்ளார்” என்றார்.

Exit mobile version