Site icon ழகரம்

கல்வியே குழந்தைக்கு பெற்றோர் தரும் உண்மையான சொத்து: சென்னை பல்கலை. 164-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

கல்விதான் குழந்தைகளுக்கு பெற்றோர் தரும் உண்மையான சொத்து என்று சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஆளுநர் ஆர்.என்.ரவிதலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில் முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அவர் கூறியதாவது:

கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், மேதைகள், தொழிலதிபர்கள், பேராசிரியர்கள், அரசியல்தலைவர்கள் என பலதரப்பட்ட தலைவர்களை உருவாக்கிய பெருமை சென்னை பல்கலைக்கழகத்துக்கு உண்டு. கற்பதன் மூலமாகத்தான் ஒருவரது உள்ளார்ந்த திறமைகள் வளர்கின்றன என்பதை நோக்கமாக கொண்டது இப்பல்கலைக்கழகம்.

‘நான் முதல்வன்’ திட்டம்

தமிழக மாணவர்கள் கல்வியில், சிந்தனையில், அறிவாற்றலில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. தமிழக அரசின் மிக முக்கியமான இலக்கும் அதுதான். அதற்காகவே ‘நான் முதல்வன்’ என்ற திட்டத்தை தொடங்கியுள்ளோம்.

தமிழக மக்களால் முதல்வராக ஆக்கப்பட்டுள்ள நான், அனைத்து மாணவர்களையும் முதல்வன் ஆக்க உருவாக்கிய அற்புதமான திட்டம் இது. அனைத்து இளைஞர்களையும் கல்வியில், ஆராய்ச்சியில், சிந்தனையில் செயலில், திறமையில் சிறந்தவர்களாக மாற்றவே இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளோம்.

இளைஞர் தகுதி மேம்பாடு

இன்றைய தினம் வேலைகள் இருக்கின்றன. ஆனால், அதற்குத் தகுதியான இளைஞர்கள் கிடைக்கவில்லை என்கிறார்கள். எனவே, இளைஞர்களுக்கு அனைத்து தகுதிகளையும் உருவாக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது. வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் இருக்கக் கூடாது.

அதேபோல, தகுதியானவர்கள் வேலைக்கு கிடைக்கவில்லை என்று நிறுவனங்களும் சொல்லக்கூடாது. அத்தகைய நிலையை உருவாக்க அரசு பல்வேறு திட்டங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

பெண் கல்வியை ஊக்குவிக்கவும், இடைநிற்றலைத் தவிர்க்கும் பொருட்டும், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது. கல்லூரியில் சேர்ந்து படிப்பு முடியும் வரைமாணவிகளின் வங்கிக் கணக்கில்மாதா மாதம் ரூ.1,000 செலுத்தும்வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவசப் பேருந்து பயணம், கல்வி உதவித் தொகை, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள் என எண்ணற்ற திட்டங்களை, நிதிப் பற்றாக்குறை இருந்தபோதிலும் மாணவர்களின் நலன் கருதி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்.

திருநங்கைகளுக்கு இலவசக் கல்வி, வரும் கல்வி ஆண்டில் சமூக நீதி மற்றும் திருக்குறள் தொடர்பான பாடம் விருப்பப் பாடங்களாக அறிமுகம், ஆய்வுக் கட்டுரை சுருக்கம் தமிழில் சமர்ப்பிப்பு என சென்னை பல்கலைக்கழகத்தின் சிறப்பான முயற்சிகளை பாராட்டுகிறேன்.

உயர்கல்வியின் பொற்காலம்

கல்விதான் பெற்றோர் தங்கள்குழந்தைகளுக்கு தரும் உண்மையான சொத்து. இதை யாரிடம் இருந்தும் யாரும் பிரிக்க முடியாது.காமராஜரின் காலம் பள்ளிக் கல்வியின் பொற்காலம், கருணாநிதியின் காலம் கல்லூரியின்பொற்காலம் என்பதைப்போல, என் தலைமையிலான ஆட்சிக்காலம் உயர்கல்வியின் பொற்காலமாக வேண்டும் என்றுதிட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நல்ல முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும் தமிழக ஆளுநருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

இணைவேந்தரும், உயர்கல்வித் துறை அமைச்சருமான பொன்முடி, விழாவுக்கு முன்னிலை வகித்து பேசியதாவது:

நுழைவுத் தேர்வுகள் கூடாது

தமிழகத்தில் பெண்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள் என்றால் அதற்கு அடித்தளமிட்டவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி.

அனைவரும் படிக்க வேண்டும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் சித்தாந்தம். பெண்கள் கல்வியிலும், ஆராய்ச்சியிலும் சிறந்து விளங்குகிறார்கள். இதுதான் திராவிட இயக்கத்தின் சாதனை, பெரியாரின் சாதனை.

கல்வி மாநிலப் பட்டியலில் இருந்தால் உயர்கல்வி இன்னும் வளரும். மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு, கலை அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கொண்டுவருவது போன்ற நடவடிக்கைகள் தனியார்பயிற்சி நிறுவனங்கள் கொள்ளையடிக்கவே வகை செய்யும்.

ஆளுநருக்கு நன்றி

நீட் நுழைவுத் தேர்வில் இருந்துதமிழகத்துக்கு விலக்கு அளிக்கவகை செய்யும் சட்ட மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பிவைத்ததற்காக ஆளுநருக்குநன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைநடைபெற வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் நிலைப்பாடு.

கல்வியையும், சுகாதாரத் துறையையும் இரு கண்களாகக் கருதிசெயல்படுகிறார் முதல்வர். மாணவர்களின் வேலைவாய்ப்புக்கு ஏற்ப பாடத் திட்டம் மாற்றியமைக்கப்படும். அவர்களுக்கு சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படும்.

தமிழகம் கல்வியில் சிறந்து விளங்குகிறது என்று ஆளுநரே கூறியிருக்கிறார். தமிழகத்தில் உயர்கல்வி செல்வோரின் எண்ணிக்கை 53 சதவீதம். இது இந்தியாவிலேயே அதிகம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Exit mobile version