மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை அறிக்கை கேட்கப்பட்டுள்ளதாகவும், அது கிடைத்தபின் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தக் கேள்விக்கு முழுமையான அறிக்கை வந்தபின்னர்தான் நான் பதிலளிக்க முடியும். இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை நாங்கள் அறிக்கை கேட்டிருக்கிறோம். அறிக்கை கிடைத்த பின்னர், அதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.
மேலும், ஒவ்வொரு மீனவர்களுடைய படகுகளிலும் ஜிபிஎஸ் கருவியை பொருத்த வேண்டும் என்று மத்திய அரசு பலமுறை அறிவுறுத்தியுள்ளது. ஆனால் சில நேரங்களில் மீனவர்கள் எல்லை தாண்டுவதும் நடந்துகொண்டிருக்கிறது. தற்போது நடந்துள்ள சம்பவம் குறித்த விசாரணை அறிக்கை வந்தபின்னர்தான் அதுகுறித்து சொல்ல முடியும்.
அதேபோல, திசைகாட்டுதல் தொடர்பாக மீனவர்களை எச்சரிக்கும் விதமாக ஏற்கெனவே நம்முடைய தொழில்நுட்பங்கள் இருக்கிறது. மீனவர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்திக் கொண்டிருக்கிறோம். அவர்களுக்கும் தெரியும், காலங்காலமாக அவர்கள் கடலுக்கு சென்றுவருவதாலும்கூட சிலநேரங்களில் அது மாறக்கூடும்.
மீனவர் நலன் என்பது மாநிலத்துடன் சம்பந்தப்பட்டது. ஆனாலும், இந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே தமிழ்நாட்டுக்கு கிட்டத்தட்ட 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருக்கிறது” என்று அவர் கூறினார்.
முன்னதாக, கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீண்பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 10 மீனவர்கள் காயமடைந்தனர்.