குரங்கு அம்மை தடுப்பு வழிமுறைகள் தொடர்பாக அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ஆலோசனை நடத்தினார்.
குரங்கு அம்மை நோய் பாதிப்பு மே மாதம் 13 – 15 ம் தேதியில் லண்டனில் 7 பேருக்கு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அமெரிக்கா, போர்ச்சுக்கல், யூரோப், ஸ்பெயின் போன்ற நாடுகளுக்கு பரவியது. இதனால் இந்தியாவில் தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது.
இதுவரை குரங்கு அம்மையால் உயிரிழப்பு என்பது இல்லை எனவும், தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. இதனால், குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பன்னாட்டு பயணிகளை கண்காணிக்க தமிழக பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், குரங்கு அம்மை நோய் உள்ள நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு, தொடர் காய்ச்சல், உடல்வலி, தோல் அலர்ஜி, அம்மை கொப்புளங்கள் போன்ற அறிகுறிகள் இருந்தால் அவர்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை சேகரித்து, புனேவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்ப வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களிலும், சேலம், தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பை தீவிரபடுத்த வேண்டும்.
அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து 7 முதல் 21 நாட்கள் வரை தனிமைப்படுத்துதலில் ஈடுபடுத்த வவேண்டும். மேலும் கடந்த 21நாட்களில் இந்த நாடுகளில் இருந்நு வந்த பயணிகளையும் கண்டறிந்து பரிசோதனை மேற்கொள்ள மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கையில் தொடர்பாக அனைத்த மாநில சுகாதாரத்துறை செயலர்களுடன் ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் இன்று காலை ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக சுகதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் மற்றும் பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநயாகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.