52% வரை மின்கட்டண உயர்வை தாங்க முடியாது; உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”தமிழகத்தில் மின்கட்டணங்களை ஓர் அலகிற்கு 27.50 பைசா முதல் ரூ.1.25 உயர்த்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. மின்சார பயன்பாட்டின் அடிப்படையில் சில பிரிவினருக்கு 52% வரை கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களால் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் உயர்த்தப்படவிருக்கும் மின்கட்டண விகிதங்களை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையில் வெளியிட்டுள்ளார். மின் கட்டண உயர்வு குறித்த தமிழக அரசின் கோரிக்கை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டு, மக்கள் கருத்துக் கேட்பு உள்ளிட்ட நடைமுறைகளுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் முதல் செயல்பாட்டுக்கு வரக் கூடும். ஆனால், உயர்த்தப்படவுள்ள மின் கட்டண விகிதங்களை ஏழை – நடுத்தர மக்களால் தாங்க முடியாது.
தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தேசித்துள்ள கட்டண உயர்வின் அடிப்படையில் இலவச மின்சாரம் பெறுவோர் தவிர மற்ற அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். இரு மாதங்களுக்கு 200 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோர், ஓர் அலகுக்கு 27.50 காசுகள் கூடுதலாக செலுத்த வேண்டும். இது 32.35% உயர்வு ஆகும். 500 அலகு வரை மின்சாரம் பயன்படுத்துவோர் ஓர் அலகுக்கு ரூ.1.19 வரையும், 900 அலகு வரை பயன்படுத்துவோர் அலகுக்கு ரூ.1.25 வரையும் கூடுதலாக செலுத்த வேண்டும். இவர்கள் மொத்தமாக முறையே ரூ.595, ரூ.1,130 கூடுதலாக செலுத்த வேண்டும். இது முறையே 52%, 25% அதிகம். தமிழக வரலாற்றில் இந்த அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை.
மின்சாரக் கட்டணத்தை இந்த அளவுக்கு உயர்த்த தமிழக அரசு கூறியுள்ள காரணங்கள் எவையும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கடன்சுமை ரூ.1,59,823 கோடியாகவும், வட்டியாக செலுத்தப்படும் தொகை ரூ.16,511 கோடியாகவும் அதிகரித்து விட்டதாகவும், அவற்றை சமாளிக்க 8 ஆண்டுகளுக்கு பிறகு மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் மின்சாரத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
மின்சார வாரியத்தின் கடன் சுமை அதிகரித்ததற்கு உதய் திட்டம் முறையாக செயல்படுத்தப்படாதது, வெளிச்சந்தையிலிருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியது, மின்னுற்பத்தித் திட்டங்கள் திட்டமிடப்பட்ட காலத்திற்குள் செயல்படுத்தி முடிக்கப்படாததால் அவற்றின் திட்டச் செலவு அதிகரித்தது, மின்திட்டங்களை செயல்படுத்துவதற்காக வாங்கப்பட்ட கடன் மீதான வட்டி ரூ.12,647 கோடியாக அதிகரித்திருப்பது, வெளிநாடுகளில் இருந்து அதிகவிலைக்கு நிலக்கரி வாங்கியது ஆகியவை தான் காரணம் என்று மின்துறை அமைச்சரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.
மின்சார வாரியத்தின் இழப்பு அதிகரித்ததற்காக கூறப்படும் எந்த காரணத்திற்கும் பொதுமக்கள் காரணம் அல்ல; அனைத்து காரணங்களுக்கும் நிர்வாக சீர்கேடுகள் தான் காரணம் என்பதை அமைச்சர் அளித்துள்ள விளக்கத்திலிருந்தே உணர முடியும். இவ்வாறாக யாரோ செய்த தவறுகளுக்காக, எந்தத் தவறும் செய்யாத மக்களை தண்டிப்பது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? மின்திட்டங்களை உரிய காலத்தில் செயல்படுத்தி மின்னுற்பத்தி செலவுகளை குறைப்பதன் மூலம் மின்கட்டணத்தை உயர்த்தாமல் மின் வாரியத்தை லாபத்தில் இயக்க முடியும் என்று பாமக தொடர்ந்து ஆலோசனை வழங்கி வருகிறது.
ஆனால், 2006-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டு 2014-ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 1800 மெகாவாட் மின்சாரத் திட்டங்கள் தவிர கடந்த 20 ஆண்டுகளில் எந்த புதிய மின்திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை. 17,000 மெகாவாட்டுக்கும் கூடுதலான மின்திட்டங்கள் செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இவற்றுக்கு பொதுமக்கள் எந்த வகையில் காரணம்? மின்சார வாரியத்தின் தவறுகளுக்காக மின்கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை தண்டிக்கக்கூடாது.
தவிர்க்கவே முடியாத சூழலில் மின்சாரக் கட்டணத்தை ஓரளவு உயர்த்துவதைக் கூட நியாயப்படுத்த முடியும். ஆனால், அனைத்துப் பிரிவினருக்கும் சராசரியாக 20 விழுக்காடு அளவுக்கும், அதிகபட்சமாக 52% வரையிலும் மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்றது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, ஜிஎஸ்டி வரி உயர்வு ஆகியவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் கரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் மக்களின் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் மின்சாரக் கட்டண உயர்வை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியாது; அவர்களின் வாழ்வில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, தமிழ்நாடு அரசு உத்தேசித்துள்ள மின்சாரக் கட்டண உயர்வை கைவிட வேண்டும். இது தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் கொடுத்துள்ள திட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நிர்வாக சீர்திருத்தங்களின் மூலம் மின் வாரியத்தை லாபத்தில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.