செய்திகள்உலகம்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள சைக்கிளை ஊக்குவிக்கும் தீர்மானம்: ஐ.நா. நிறைவேற்றம்

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒரு கருவியாக சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் தீர்மானம் ஒன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது.

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டு, ஐ.நா. பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள ஒரு கருவியாக சைக்கிளை ஊக்குவிக்கும் தீர்மானம் ஒன்று, உறுப்பினர்களின் ஆதரவுடன் செவ்வாய்க்கிழமை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

சைக்கிளுக்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் கொண்டு வந்துள்ள தீர்மானத்தில், “வளரும் மற்றும் வளர்ந்த நாடுகளில் நகர்ப்புற மற்றும் கிராமப்புற அமைப்புகளில், பொதுப் போக்குவரத்தில் சைக்கிளை பயன்படுத்த அழைப்பு விடுக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பூமியின் வெப்ப நிலை 2 டிகிரி செல்சியஸை கடக்கும் சூழல் ஏற்பட்டால் மனித இனம் வாழ்வதற்கான சூழல் இல்லாமலாகிவிடும் என்று ஐபிபிசி எச்சரிக்கை விடுத்திருந்தது.

காலநிலை மாற்றத்தாலேயே மோசமான அளவு மழை வெள்ளம், வறட்சி, காட்டுத் தீ ஆகியவை ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஏற்கெனவே மேற்கு ஐரோப்பாவின் ஜெர்மனி, நெதர்லாந்து, லக்சம்பர்க், பெல்ஜியம், ப்ரூசல்ஸ் ஆகிய நாடுகளிலும் காலநிலை மாற்றத்தால் பெரும் இயற்கை பேரிடர்கள் நிகழ்ந்தன.

இந்த நிலையில், காலநிலை மாற்றத்தை தடுக்க உடனடி நடவடிக்கை தேவை என்று உலக நாடுகளை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button