தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. இவற்றில் மொத்தம் 12,285 வார்டுகள் உள்ள நிலையில், உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கக் கடந்த 19-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், பா.ஜ.க வேட்பாளர் உமா ஆனந்தன் வெறும் 8 வாக்குக்கள் மட்டுமே பெற்று தோல்வியடைந்ததாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரவி வந்த நிலையில், 5,539 வாக்குகள் பெற்று உமா ஆனந்தன் வெற்றி பெற்றதாக தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம் மேற்கு மாம்பலம் 134-வது வார்டில் பா.ஜ.க சார்பில் உமா ஆனந்தன் என்பவர் போட்டியிட்டார்.
இந்த நிலையில் இன்று மாலை, சென்னை மாநகராட்சியின் 134 வார்டில் வாக்குகள் எண்ணப்பட்டதையடுத்து, பா.ஜ.க சார்பாக போட்டியிட்ட உமா ஆனந்தன் 5,539 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.