தமிழகத்தில் 21 மாநகராட்சி, 133 நகராட்சி, 490 பேரூராட்சிகளில் மொத்தமுள்ள 12,838 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் போட்டியின்றி வெற்றி பெற்றவர்கள் தவிர்த்து 12,602 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டி உள்ளது.
இவர்களை தேர்வு செய்வதற்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு துவங்கியது.
ஆழ்வார்பேட்டையில் உள்ள எஸ் ஐ இ டி கல்லூரியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி கிருத்திகா உதயநிதி வாக்களித்தனர்.
இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் வாக்களித்தபோது அணிந்து வந்த சட்டையில் திமுக கொடியுடன், சூரியன் போன்ற அடையாளம் இருந்தது. இது தேர்தல் விதிமீறல் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஓட்டு போட்ட பிறகு உதயநிதி ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‛‛நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலை விட திமுகவுக்கு பெரிய வெற்றி கிடைக்கும். தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்தேன். நல்ல வரவேற்பு உள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு முதல்வர் ஸ்டாலின் கொரோனாவை கட்டுப்படுத்தி, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறார். இதற்கு மக்கள் அங்கீகாரம் அளிப்பார்கள். மேற்கு மண்டலத்தில் வெற்றி வாய்ப்பு நன்றாக உள்ளதாக நம்புகிறேன். கோவையில் திமுக குறித்து குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் யாரும் கூறவில்லை. தோல்வி பயத்தில் அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்” எனக்கூறினார். இந்த வேளையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ‛‛உங்களை கத்துக்குட்டி என்கிறாரே” என்ற கேள்விக்கு, கையெடுத்து கும்பிட்ட உதயநிதி சிரித்தபடியே அங்கிருந்து சென்றார்.