தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் 48,000 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவதாக சட்டப்பேரவையில் போக்கவரத்துத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் கூறியுள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் பட்ஜெட் 2022-23 மீதான விவாதக் கூட்டத்தொடர் இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்த கேள்வி நேரத்தில், மதுரை மேற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் கே.ராஜூ, அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் என்றவுடன் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், மதுரை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில், குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டும்தான் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் பெண்கள் அவர்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடிவதில்லை எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், “திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி, மாநகர பேருந்துகளில் பெண்களுக்கு முதலில் 40 சதவீதம் என வைத்தோம். ஆனால், தற்போது 61.82 சதவீதம் கூடிவிட்டது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் பெண்கள்தான் 48 சதவீதம், நூற்றுக்கு 48 சதவீதத்துக்கு மேல் உள்ளனர். இவர்களில் 90 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். எனவே மகளிர் பேருந்து என்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவுத்திட்டம். அந்த கனவுத் திட்டம் மிக வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது.
குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே அனுமதி: முதலில் ரூ.1380 கோடி ஒதுக்கிய அரசு, இந்த முறை ரூ.1510 கோடி ஒதுக்கியுள்ளது. அரசுப் பேருந்துகளில் மகளிர் பயணம் என்பது தமிழ்நாட்டில் திருப்திகரமாக நடந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட பேருந்துகளில் மட்டுமே மகளிர் அனுமதிக்கப்படுவர். அனைத்து பேருந்துகளிலும் இலவசமாக விட்டால், அனைத்து பேருந்துகளிலும் அவர்கள் ஏறிச்செல்வர்.
ரூ.48,000 கோடி நஷ்டம்: பிறகு எப்படி போக்குவரத்துக்கழகத்தை நடத்துவது? ஏற்கெனவே ரூ.48,000 கோடி நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கிறது. ஆகவே தேர்தல் அறிக்கையில், என்ன வாக்குறுதி அளிக்கப்பட்டதோ, அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர்.
பேரவையில் சிரிப்பலை: முன்னதாக பேரவைத் தலைவர் அப்பாவு அதிமுக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் செல்லூர் கே.ராஜூவுக்கு பேச வாய்ப்பளித்தார். அப்போது கேள்வி எழுப்புவதற்கு முன், செல்லூர் ராஜூ, பேரவைத் தலைவருக்கு கோடானக் கோடி நன்றி பேரவைத் தலைவரே, இத்தனை நாளாக வாய்ப்பு கேட்டேன், இன்றைக்குத்தான் வாய்ப்பளித்தீர்கள் என்றவுடன் பேரவையில் சிரிப்பலை எழுந்தது. அதே போல், செல்லூர் ராஜூவின் பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன், மக்கள் அனைவரும் சந்தோஷமாகத்தான் இருக்கின்றனர், நம்ம ராஜூதான் சந்தோஷமாக இல்லை என்று நான் நினைக்கிறேன்” என்று கூறியபோதும் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.