Site icon ழகரம்

மத்திய, மாநில அரசின் பங்குகளை சேர்த்து பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.912 கோடி ஒதுக்கீடு

பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்துக்கு மத்திய அரசின் 60 சதவீத பங்கு, மாநில அரசின் 40 சதவீத பங்கு என மொத்தம் ரூ.912.19 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக தமிழக ஊரக வளர்ச்சித் துறை செயலர் பெ.அமுதா வெளியிட்டுள்ள அரசாணை:

பிரதமரின் கிராமப்புற வீடு கட்டும் திட்டத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கு கடந்த 2018-19-ம் ஆண்டுக்கான நிலுவை, 2020-21 மற்றும் 2021-22-ம் ஆண்டுகளில் 2.89 லட்சம் வீடுகள் கட்ட ரூ.3,564.98 கோடியில் நான்கில் ஒரு பங்கான ரூ.891.12 கோடியை மத்திய அரசு ஒதுக்கியது. இந்த நிதியுடன் தனது நிதியையும் சேர்த்து தமிழக அரசு ரூ.1,485.21 கோடி ஒதுக்கியது.

இதையடுத்து, மத்திய அரசு தனது பங்கில் எஞ்சியுள்ள ரூ.2,673.86 கோடியில் ரூ.891.36 கோடியை தமிழக அரசுக்கு வழங்கியது. அடுத்தகட்டமாக ரூ.667.45 கோடியை ஒதுக்கியது. இதன் தொடர்ச்சியாக, ஆதிதிராவிடர் மற்றும் இதர பிரிவினருக்கு மத்திய அரசால் ஒதுக்கப்பட்ட ரூ.547.31 கோடியுடன் (60 சதவீத பங்கு), மாநில அரசின் ரூ.364.88 கோடியையும் (40 சதவீத பங்கு) சேர்த்து ரூ.912.19 கோடி ஒதுக்குமாறு தமிழக அரசை ஊரக வளர்ச்சித் துறை ஆணையர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, ரூ.912.19 கோடியை ஒதுக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை உரிய கணக்குகளில் இருந்து பெற்றுக் கொள்ளவும் ஊரக வளர்ச்சி ஆணையருக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இது மட்டுமின்றி, இத்திட்டத்தில் கட்டப்படும் வீடுகளுக்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்க மத்திய அரசு கூடுதலாக ரூ.200 கோடி வழங்கியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version