தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்பு!
- திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் 36வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழ்நாட்டிற்கு வருகை தருகிறார். பெங்களூரில் இருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் 1.30 மணி அளவில் மதுரை விமான நிலையம் வந்தடைகிறார்.
- அவரை மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எடப்பாடி கே.பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் வரவேற்க உள்ளனர். பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்திற்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் 1,500 போலீஸ் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- மதுரை விமான நிலையத்திலிருந்து பிற்பகல் 2.20 மணியளவில், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி காந்திகிராமம் சென்று, அங்கிருந்து சாலை மார்க்கமாக காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
- நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மொத்தம் 2,314 மாணவர்களுக்கு பட்டம் வழங்குகிறார். மேலும் பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குகிறார்.
- இந்நிகழ்ச்சி நிறைவடைந்த பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மதுரை விமான நிலையம் சென்றடையும் பிரதமர் நரேந்திர மோடி 4.30 மணியளவில் அங்கிருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார். பிரதமர் மோடியின் இந்த வருகையை முன்னிட்டு முன்னேற்பாட்டுப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
- இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பை பலப்படுத்துமாறு தமிழ்நாடு காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உளவுத்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. தலைவர்களுக்கு வழங்கப்படும் பூங்கொத்துக்கள், மாலைகள் உள்ளிட்ட பொருட்களை தீவிர சோதனைக்கு உட்படுத்த காவல்துறையினருக்கு உளவுத்துறை அறிவுறுத்தியுள்ளது.