Site icon ழகரம்

கலிபோர்னியாவை வதைக்கும் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத் தீ வேகமாக பரவி வருவதால் அங்கு 6,000க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் யோசெமிட்டி தேசிய பூங்காவிற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை முதல் கட்டுப்பாட்டை மீறி காட்டுத் தீ எரிந்து வருகிறது. இது இந்த ஆண்டில் கலிபோர்னியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயாக மாறி இருக்கிறது.

ஞாயிற்றுக்கிழமைவரை காட்டுத் தீயானது 22 சதுர மைல்களுக்கு (56 சதுர. கிமீ) காட்டை எரித்துவிட்டது. எந்த கட்டுப்பாடும் இல்லாமல் தீ எரிந்து வருகிறது. மேலும் மரங்கள் காய்ந்துள்ளதால் எளிதாக தீப்பற்றி கொள்கின்றன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தீவிரமாக பரவி வரும் காட்டுத் தீ காரணமாக சுமார் 6,000க்கும் அதிகமானவர்கள் தங்கள் குடியிருப்புப் பகுதியிலிருந்து வேறு இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 2,000க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். காட்டுத் தீயை தொடர்ந்து கலிப்போர்னியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கலிபோர்னியாவில் அமைந்துள்ள யோசெமிட்டி தேசியப் பூங்கா, அங்குள்ள பிரபல சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும். இந்தப் பூங்காவில் உலகின் பழமையான பல சிவப்பு மரங்கள் உள்ளன. யோசெமிட்டியின் தெற்குப் பகுதியில்தான் 3,000 ஆண்டுகள் பழமையான செக்வையாஸ் மரமும் உள்ளது.

கலிபோர்னியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயினால் ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 10 லட்சம் ஏக்கர் அளவில் பாதிப்பு ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

Exit mobile version