நகர்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக சென்னை மாநகராட்சியில் 153 இடங்களில் அசுர பலத்துடன் வெற்றி பெற்று உள்ளது. இதில் அதிமுக 15 இடங்களிலும், அமமுக, பாஜக தலா ஒரு இடங்களிலும், சுயேட்டைகள் 5 இடங்களில் வெற்றி பெற்று வார்டு உறுப்பினராக நேற்று பதவியேற்று கொண்டனர்.
ஏற்கனவே சென்னை மாநகராட்சி முதன் முறையாக தாழ்ந்தப்பட்ட பெண் பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டது.இந்த நிலையில் இன்று இதில் திருவிக நகர் 74வது வார்டு பகுதியில் வெற்றி பெற்ற பிரியா ராஜன் சென்னை மேயராக பொறுப்பேற்க உள்ளார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தன்னை எதிர்த்துப் போட்டியிட்டவர்களை விட 6,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். அமைச்சர் சேகர்பாபு ஆதரவினால் பிரியா ராஜனின் பெயர் மேயர் பட்டியலில் தேர்வாகியிருப்பதாக தி.மு.க வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரியா ராஜன் சென்னையில் மூன்றாவது பெண் மேயராகப் பதவியேற்கவுள்ளார். அதோடு, வடசென்னையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் மேயர் என்ற பெருமையும் பிரியா ராஜனுக்கே வந்து சேரும்.
இவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செங்கை சிவத்தின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நாளை நடைபெறவிருக்கும் மறைமுக தேர்தலில் பிரியா ராஜன் தேர்வு செய்யப்பட்டு மேயராகப் பதவியேற்பார்.