“தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டிய அவசியமில்லை” என ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் சிவில் விமான போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
திருநெல்வேலி மக்களவை தொகுதி பொறுப்பாளரான அவர், பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மத்தியில் பாஜகவின் 8 ஆண்டு கால ஆட்சியில் ஜாதி,மதம், இனம் கடந்து பாகுபாடின்றி அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டுள்ளன.
மக்களுக்கான ஆட்சியை பிரதமர் மோடி நடத்தி வருகிறார். சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமானது. சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்கும் விவகாரத்தில் சட்ட சிக்கல்கள் உள்ளன. அதற்கு தீர்வு காணப்பட்டு சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். தமிழகத்தை இரண்டாக பிரிக்க அவசியம் இல்லை. இவ்வாறு வி.கே.சிங் தெரிவித்தார்.
பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் தயாசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.