சூட்கேஸில் 28 மில்லியன் யூரோவுடன் எல்லையைக் கடந்த உக்ரைன் முன்னாள் எம்.பி.யின் மனைவி, உலகையே ஆச்சர்யத்தில் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனில் இருந்து மக்கள் அன்றாடம் அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். போலந்து, ஹங்கேரி, ஸ்லோவேனியா, ருமேனியா என பல்வேறு நாடுகளிலும் தஞ்சம் புகுந்து வருகின்றனர். இதில் போலந்து நாட்டிலும் அடுத்தபடியாக ஹங்கேரியிலும் அதிகம் பேர் இடம்பெயர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹங்கேரி எல்லையில் உக்ரைன் நாட்டின் முன்னாள் எம்.பி. கோட்விட்ஸ்கியின் மனைவி காத்திருந்தார். அப்போது அவரை குடியேற்ற அதிகாரிகள் பரிசோதனை செய்துள்ளனர். அவருடைய சூட்கேஸ்களை பரிசோதனை செய்தபோது, அதில் கத்தை கத்தையாக யூரோக்கள் இருந்தன.
ரொக்கமாக 28 மில்லியன் யூரோ இருந்தன. இவ்வளவு பணத்தை எடுத்துக் கொண்டு போர்ப் பகுதியை அவர் கடந்து வந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இவ்வளவு பணத்தை வைத்து ஒருவேளை அந்த முன்னாள் எம்.பி.யின் மனைவி அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்த உக்ரேனியர்களுக்கு உதவுவாரா என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.