செய்திகள்தமிழ்நாடு

கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவிடும் பணி: அமைச்சர்கள் அன்பரசன், சேகர்பாபு ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனத்தில் கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் இரண்டாம் கட்டமாக அளவீடுகள் செய்யப்பட்டன. அந்தப் பணிகளை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்து ஆய்வு செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் இரண்டாம் கட்டமாக அளவிடும் பணிகள் நேற்றுநடைபெற்றன. இந்த அள விடும்பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியது:

தமிழக அரசு பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலுக்கு சொந்தமான இடங்களை, ரோவர் கருவி வாயிலாக, நில அளவை செய்து, நிலங்களை முழுமையாக பாதுகாக்கும் பணியை செய்து வருகிறோம்.

இதன் ஓர் அங்கமாக தற்போது, காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் திருப்புலிவனம் வியாக்ரபுரீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 9.27 ஏக்கர் நிலங்களை அளவீடு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் 1 லட்சம் ஏக்கருக்கான கோயில் நிலங்கள் அளவிடும் பணி நிறைவு பெற உள்ளது. இதற்கென 150 பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் 50 குழுக்களாகப் பிரிந்துநில அளவிடும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர். இதனை மேலும்விரிவுபடுத்தும் வகையில் 66குழுக்கள் செயல்படுத்தப்படவுள்ளன. விரைவில் இதனை 100 குழுக்களாக உயர்த்த முடிவு செய்துள்ளோம்.

இறைவனுக்கே சொந்தம்

‘இறைவன் சொத்து இறைவனுக்கே சொந்தம்’ என்ற அடிப்படையில் கோயில் நிலங்கள் அனைத்தும் நில அளவீடு செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் க.செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், அரசுஅலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button