விருதுநகர் அருகே மனு கொடுக்க வந்த பெண் ஒருவரை வருவாய்துறை அமைச்சர் தாக்கியதாக வைரலான வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் மாவட்டம் பாலவனத்தத்தில் கடந்த சனிக்கிழமை பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, பாலவனத்தத்தைச் சேர்ந்த கலாவதி (55) என்பவர் தனது தாய் சகுந்தலா (77) என்பவருக்கு முதியோர் உதவித் தொகை வழங்க கோரி அமைச்சரிடம் மனு கொடுத்தார்.
அப்போது அருகில் நின்ற மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டியிடம் அமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். இடையே குறுக்கிட்டு பேசிய காலாவதியிடம் மனுவை வாங்கிய அமைச்சர் அவர் தலையில் லேசாக தட்டி கொஞ்சம் பொறு என்றார்.
ஆனால் மனு கொடுக்க வந்த பெண்ணை வருவாய்த்துறை அமைச்சர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் வீடியோ வைரலானது.
இந்நிலையில் விருதுநகரில் உள்ள வருவாய்த்துறை அமைச்சர் வீட்டில் கலாவதி இன்று காலை பேட்டியளித்தார். அப்போது ”வருவாய்த்துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தனது குடும்பத்தில் ஒருவரைப் போல தங்களிடம் பழகி வருவதாகவும் கடந்து 30 ஆண்டுகளாக தங்களுக்கு நல்லது கெட்டது அனைத்தும் பார்த்து வருவதாகவும் தெரிவித்தார்.
எனது தாய் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பம் அளித்தேன். அப்போது மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் எனது தலையில் எப்போதும் போல தட்டி கண்டிப்பாக நான் செய்து தருகிறேன், நான் செய்யாமல் வேறு யார் செய்வார் எனக் கூறினார். அமைச்சர் எனது தலையில் கவரால் தட்டிய வீடியோ வைரலானது. ஆனால் உண்மையில் நடந்த சம்பவம் அதுவல்ல. அமைச்சர் என்னை அடிக்கவில்லை” என்றார்.
மேலும் கலாவதியின் தாய் சகுந்தலாவுக்கு முதியோர் உதவித் தொகை வழங்குவதற்கான ஆணை இன்று ( ஜூலை 13) வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.