
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (எ) அப்பு (33). திருட்டு வழக்கு தொடர்பாக கொடுங்கையூர் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்ட ராஜசேகர், திடீரென உயிரிழந்தார். அவரை போலீஸார் அடித்துக் கொன்றுவிட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, ராஜசேகர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிபோலீஸாருக்கு மாற்றப்பட்டது. மேலும், காவல் ஆய்வாளர் ஜார்ஜ்மில்லர் பொன்ராஜ் உள்பட 5 போலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், மாஜிஸ்திரேட் லட்சுமியும் விசாரணை மேற்கொண்டார்.
இந்நிலையில், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ராஜசேகரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடலை பெற்றுக்கொள்ள குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இதனால், அவரதுஉடல் தொடர்ந்து ஸ்டான்லி அரசுமருத்துவமனையிலே வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ராஜசேகரின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைப் பெற்றுத் தருமாறு, மாநில மனித உரிமை ஆணையத்தில் ராஜசேகரின் குடும்பத்தினர் நேற்று மனு அளித்தனர்.
இதுகுறித்து காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஆசிர்வாதம் செய்தியாளர்களிடம் கூறும்போது, “உடல் கூராய்வு நிகழ்ந்து 24 மணி நேரத்தில், பிரேதப் பரிசோதனை அறிக்கையை சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால்,நீதிமன்ற உத்தரவைப் பொருட்படுத்தாமல், சென்னை போலீஸார் அறிக்கை தர மறுக்கின்றனர்.
ராஜசேகர் உயிரிழப்பு வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து, முதல்கட்டமாக ராஜசேகர் குடும்பத்துக்கு அரசு ரூ.8 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
ராஜசேகரின் உடலில் லத்தியால் தாக்கிய காயங்கள் இருப்பதாகவும், அவரது விரல் உடைக்கப்பட்டுள்ளதாகவும் நேரில் பார்த்தஅவரது சகோதரர் தெரிவித்துள்ளார். எனவே, காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 போலீஸாரை கொலை வழக்கில் கைது செய்து, சிறையில் அடைக்க வேண்டும்” என்றார்.
இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் எஸ்.பாஸ்கரன் பிறப்பித்துள்ள இடைக்கால பரிந்துரையில் கூறியிருப்பதாவது:
உயிரிழந்த ராஜசேகரின் தாயார் உஷாராணி, மனித உரிமைஆணையத்தில் ஆஜராகி, தங்களது குடும்பத்தினர் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாக முறையிட்டார். இந்த வழக்கில் தனிநபரின் சுதந்திரம் மற்றும் உரிமையைப் பாதுகாக்க வேண்டியது முக்கியம். எனவே, ராஜசேகரின் தாயார் உஷாராணி மற்றும்அவரது குடும்பத்தினருக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உஷாராணி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை கெல்லீஸில் உள்ள அரசு இல்லத்தில் தற்காலிகமாக தங்கவைத்து உரிய பாதுகாப்பு வழங்கலாம்.
ராஜசேகரின் பிரேதப் பரிசோதனை அறிக்கை தயாரானவுடன், அவரது தாயார் உஷாராணியிடம் அதை வழங்க வேண்டும். இவ்வாறு எஸ்.பாஸ்கரன் பரிந்துரைத்துள்ளார்.