Site icon ழகரம்

ரஷ்ய தாக்குதலின் கோரமுகம்: புதினின் போரை ’தாங்கும்’ உக்ரைன் குழந்தைகள்!

உக்ரைன் மீதான தாக்குதலுக்கு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று ரஷ்யா பெயர் வைத்து அழைத்தாலும், புதினின் இந்தப் போர் தாக்குதலை உக்ரைனின் குழந்தைகளே சுமக்கின்றனர். இதற்கு சாட்சியாகி இருக்கின்றன, ரஷ்யத் தாக்குதலில் இருந்து தப்பித்து வருகையில், குண்டு வீச்சுக்கு ஆளாகி கை,கால்கள் இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உக்ரைன் குழந்தைகளின் படங்கள்.

கையில் ஒரு மஞ்சள் நிற டிராக்டர் பொம்மையை வைத்தபடி, மருத்துவமனை விட்டத்தை வெறித்துக் கொண்டிருக்கிறான் ஆர்டெம். மருத்துவமனை சிறப்பு செவிலியர்கள் அவரைத் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். ஆர்டெமுக்கு அப்படி என்னதான் ஆகிவிட்டது என்ற கேள்வி வருகிறதா? உக்ரைனின் மரியுபோல் நகரிலிருந்து தனது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டியுடன் ஆர்டெம் காரில் தப்பித்து வரும்போது, ரஷ்யா வீசிய குண்டு ஒன்று ஆர்டெமின் வயிறை பயங்கரமாக காயப்படுத்தியது. அவனுக்கு இன்னும் மூன்று வயது கூட ஆகவில்லை.

அவனுக்கு அடுத்த படுக்கையில் இருக்கும் மனாஷாவிற்கு வயது 15. கடந்த செவ்வாய்க்கிழமை மரியுபோல் நகருக்கு அருகில் நடந்த குண்டுவீச்சு தாக்குதலில் காயமடைந்த மனாஷாவின் வலது கால், அவரது உடலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

மரியுபோல் நகரில் ரஷ்யா படைகள் நடத்திய இடைவிடாத குண்டுவீச்சுத் தாக்குதலின் கோர முகத்தினை, போரின் சாட்சிகளை அருகில் உள்ள சபோரிஜியாவில் உள்ள வட்டார குழந்தைகள் மருத்துவமனையில் காணலாம்.

இந்தக் குழந்தைகள் ரஷ்யப் போரின் கோர தாண்டவத்தின் சில சாட்சிகளே. இவர்களைப் போல காயங்களுடன் நுற்றுக்கணக்கான மக்கள் மரியுபோலில் இருந்து வெளியேறியுள்ளனர். அவர்களின் உடல் காயங்கள் ஓரளவிற்கு குணமாகலாம்; ஆனால், மனதின் காயங்கள் வாழ்நாளெல்லாம் தொடரும்.

இந்தக் கோரத்தைப் பற்றி குழந்தைகள் நல மருத்துவமனையின் தலைவரும், மருத்துவருமான யூரி போர்சென்கோ கூறும்போது, “நான் ரஷ்யாவை வெறுக்கிறேன். போரில் தனது காலை இழந்துள்ள மனாஷா மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறாள். அவளால் பல நாட்களுக்கு சாப்பிடவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. தனக்கு என்ன நடந்தது என்று அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. நாங்கள் அவளுக்கு ட்ரிப்ஸ் மூலமாக உணவு கொடுக்கிறோம்.

இன்னொரு பையன், நகரத்தை விட்டு தன் பெற்றோருடன் வெளியேறி வரும் வழியில் ரஷ்யா நடத்திய குண்டுவீச்சால் தாக்கப்பட்டு தனது தாய் கண்முன்னே எரிந்து போனதை பார்த்திருக்கிறான். இரண்டு நாட்கள் கழித்து எந்த வித உணர்ச்சியும் இல்லாமல் அவன் சொல்கிறான்… “என் அப்பா எனக்கு வேறு அம்மா வாங்கித் தருவார். என்னைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல ஒருவர் வேண்டும் என்கிறான்” என்று. இவற்றை விவரிக்கும்போது மருத்துவரின் முகம் சலனமற்றே இருந்தது.

இவர்களின் கதைகளின் கதைகளைப் போன்றது தான் 9 வயதான சாஷாவின் கதையும். மேற்கு கீவ் நகரமான ஹோஸ்டோமாலைச் சேர்ந்த அவள், தனது குடும்பத்தினருடன் காரில் தப்பித்துக் கொண்டிருந்த போது ரஷ்ய துருப்புகளால் தாக்கப்பட்டார். அதில் காயமைடந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை நடந்தது. மருத்துவர்கள் அவளது கையை எடுக்க வேண்டியதாக இருந்தது. இந்தத் தாக்குதலில் சாஷா தனது தந்தையை இழந்துள்ளார்.

“ரஷ்யர்கள் என்னை ஏன் சுட்டார்கள் என்று தெரியவில்லை. இது ஒரு விபத்து. அவர்கள் என்னைக் காயப்படுத்த நினைக்கவில்லை என்று நம்புகிறேன்” என்ற சாஷாவின் குழந்தை மனதின் கேள்விக்கு யாரிடம் பதில் இருக்கிறது?

சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் இன்று 26-ம் நாளை எட்டியுள்ளது. ஐ.நா.வின் தகவல்கள் படி, பிப்ரவரி 24-ம் தேதி முதல் 900-க்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 1,500 பேர் காயமடைந்துள்ளனர்.

யுனிசெஃப் கணிப்புப்படி, இந்தப் போரினால், உக்ரைனில் உள்ள சுமார் 705 மில்லியன் குழந்தைகளின் வாழ்க்கைக்கும், நல்வாழ்வுக்கும் உடனடி அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. மார்ச் 15-ம் தேதிக்குள் 15 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் உக்ரைனில் இருந்து வெளியேறியிருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் உக்ரைன் மீதனா தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்யாவின் போர்ச் சுமையை உக்ரைன் குழந்தைகள் தாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

தகவல் உறுதுணை: பிபிசி

Exit mobile version