தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கட்சி அலுவலகம் முன்பு முத்தமிழறிஞர் கலைஞர் சிலையை திறந்து வைத்த அவர் தொடர்ந்து தனியார் உரத்தொழிற்சாலையில் 22 மெகாவாட் சூரிய ஒளி மின்சார உற்பத்தி நிலையத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து ஆயிரம் கோடி மதிப்பிலான அறைகலன் பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.
இதனிடையே, காவல்கிணறு விலக்கு அருகே முதலமைச்சரின் வாகனம் வரும் பொழுது அவரது காரின் மீது டீக்கடையில் மாஸ்டராக பணிபுரியும் பாஸ்கர் என்பவர் சில்வர் கிளாஸ் ஒன்றை வாகனத்தின் மீது வீசினார். டம்ளரை தூக்கி எறிந்ததோடு மட்டும் அல்லாமல் அந்த வழியாக சென்ற பேருந்து ஒன்றில் ஏறி தப்பிச் சென்றார்.
இதனைத் தொடர்ந்து, பணகுடி போலீசார் டீ மாஸ்டர் பாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை தேடி வந்தனர். நாகர்கோவில் சென்ற டீ மாஸ்டர் மீண்டும் காவல்கிணறு வந்த போது, அவரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது, காவல்துறையினரை அரசு பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.