Site icon ழகரம்

தமிழக ரேசன் அரிசி அதிகளவு ஆந்திராவுக்கு கடத்தல் – முதல்வர் நடவடிக்கை எடுக்க விஜயகாந்த், டிடிவி தினகரன் கோரிக்கை

தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்படுவதாக சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். கடத்தலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று தெரிவித்துள்ளதாவது:

விஜயகாந்த்: தமிழகத்தில் இருந்து ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார். பக்கத்து மாநில முன்னாள் முதல்வர் சுட்டிக்காட்டுகிற அளவுக்கு இந்த அரசு செயல்படுவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ரேஷன் அரிசி அதிகம் கடத்தப்படுவது தமிழகத்தில் இருந்துதான் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

ரேஷன் ஊழியர்கள் உணவுப் பொருட்களை பதுக்கிவைத்து, கள்ளச் சந்தையில் விற்கின்றனர். அதை உடனே தடுக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. மக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை கள்ளச் சந்தையில் வாங்கி, அண்டை மாநிலங்களுக்கு கடத்திச் சென்று வியாபாரம் செய்யும் கடத்தல்காரர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். ரயில், பேருந்து மூலம் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீஸார் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும்.

டிடிவி தினகரன்: தமிழக ரேஷன் அரிசி ஆந்திரா வழியாக கர்நாடகாவுக்கு பெருமளவு கடத்தப்படுகிறது என்ற ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு குறித்து தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும். ஏழை, எளிய மக்கள் ரேஷன் கடையில் அரிசி வாங்குவதற்கு புதுப்புது கட்டுப்பாடுகளை விதிக்கும் இவர்கள், தமிழகத்தில் இருந்து மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்காதது ஏன், வெளிமாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுகிறது என்றால் ஆளுங்கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லாமல் நடக்குமா என்ற சந்தேகம் மக்களிடம் எழுந்துள்ளது. எனவே, இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் உரிய விளக்கம் அளிப்பதுடன், கடத்தலையும் தடுத்து நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version