Site icon ழகரம்

தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டவற்றில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்?

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டவற்றில் 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஜூன் மாத நிலவரப்படி ஆளுநரின் ஒப்புதலுக்காக, சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் இருந்தன.

முதல்வர் வலியுறுத்தல்

ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்கும்போதேல்லாம், நிலுவையில் இருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி வந்தார்.

அதன்படி, தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக் கழகத்தில், வேந்தருக்குப் பதிலாக ஆய்வு மற்றும் விசாரணை அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்குதல், கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் ஆய்வு அதிகாரத்தை அரசுக்கு வழங்குதல், கூட்டுறவுச் சங்கங்களில் சில விதிகளைத் திருத்துதல், பதவிக் காலத்தைக் குறைத்தல், உயர் கல்வித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மாநிலப் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களை நியமிக்க மாநில அரசுக்கு அதிகாரம் வழங்குதல், தமிழ்நாடு அடுக்குமாடி குடியிருப்பு உரிமை மசோதா உள்ளிட்ட 21 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

இவற்றில், தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் (இரண்டாம் திருத்தம்) மசோதா (மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் மற்றும் ஒசூர் நகர்ப்புற ஒருங்கிணைப்பு), தமிழ்நாடு சம்பளம் வழங்குதல் (திருத்தம்) மசோதா (ஆங்கிலோ இந்திய சமூகம்), தமிழ்நாடு மதிப்புக் கூட்டப்பட்ட வரி (திருத்தம்) மசோதா, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (திருத்தம்) மசோதா, கூட்டுறவு சங்கம் திருத்த மசோதா மற்றும் தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்கள் (மூன்றாவது மற்றும் நான்காவது திருத்தம்) மசோதாக்கள், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு (திருத்தம்) மசோதா (உள்கட்டமைப்பு மேம்பாடுகளில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவித்தல்) உட்பட 10 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியிருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Exit mobile version