திருச்சி, அன்பில் படுகையைச் சேர்ந்த பேராசிரியர் க. நெடுஞ்செழியன் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார்!
Editor Zhagaram
திருச்சி, அன்பில் படுகையைச் சேர்ந்த வரலாற்று அறிஞரும், ஆசிவக கோட்பாட்டை ஆய்ந்தறிந்து வரையறுத்தவருமான பேராசிரியர் க. நெடுஞ்செழியன் (79) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் 04-11-2022 காலமானார்.
அண்மையில் செம்மொழி விருதினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பெற்றவர். திராவிட இயக்கங்களில் ஈடுபாடு கொண்ட இவர், மறைந்த திமுக பொதுச் செயலர் க. அன்பழகனுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர். இவருக்கு மனைவி ஜக்குபாய், மகன் பண்ணன், மகள்கள் நகைமுத்து, குறிச்சி மற்றும் மருமகன்கள், பேரன், பேத்திகள் உள்ளனர்.
திருச்சி கே.கே.நகரில் வீட்டில் வசித்து வந்தவருக்கு, உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை சென்றார். சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த சில நாள்களாக சிகிச்சையில் இருந்தவர், வெள்ளிக்கிழமை காலை உயிரிழந்தார்.
இவரது உடல், திருச்சி கே.கே.நகரில் உள்ள இல்லத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை கொண்டு வரப்படுகிறது. சொந்த கிராமமான படுகையில் நாளை 05-11-2022 சனிக்கிழமை நல்லடக்கம் நடைபெறுகிறது.
திரு. க.நெடுஞ்செழியன் திருச்சியில் உள்ள தந்தைபெரியார் அரசுக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக பணிபுரிந்தவர். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவராகவும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பெரியார் உயராய்வு மையத் தலைவராகவும் பணியாற்றியவர். 20-க்கும் மேற்பட்ட ஆய்வு நூல்களை எழுதியுள்ளார். ஆசீவகமும், அய்யனார் வரலாறும் என்ற இவரது ஆய்வு நூலானது கூடுதல் பதிப்புகளைக் கண்டுள்ளது.