தமிழ்நாடுவிளையாட்டு
ஜல்லிக்கட்டு நம் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வீர விளையாட்டு !Jallikkattu alanganallur
தொன்மையான மற்றும் மக்களின் பண்பாடு சார்ந்து பல நூற்றாண்டு தாண்டி நிற்கும் தமிழினத்தின் ம் மிகப்பெரிய அடையாளமாக ஜல்லிக்கட்டு கருதப்படுகிறது ..
ஜல்லிக்கட்டு, என்பது நம் தமிழ் மண்ணின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வீர விளையாட்டு ஆகும்.
- ஜல்லிக்கட்டு ஆரம்பகாலத்தில் “சல்லிக்கட்டு” என்று அழைக்கப்பட்டது. அது பின்னாலில் மருவி ஜல்லிக்கட்டு என்று ஆனது.தமிழர் திருநாளான பொங்கல் அன்று இந்த ஜல்லிக்கட்டு கொண்டாடப் படுகிறது. ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, கொல்லேறு தழுவுதல் போன்ற பல பெயர்களில் ஜல்லிக்கட்டு அழைக்கப்படுகின்றது. ஏறுதழுவுதல் என்ற சொல்லின் ஏறு என்பதற்கு தமிழில் காளை என்று பொருள்.
- ஆகவே, காளையை அடக்குவது அல்லது கொம்பை பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்பட்டது.மறுபுறம் பண்டைய நாணயமான சல்லிக்காசு என்பதை துணியால் முடிந்து காளைகளின் சீவிய கொம்புகளில் கட்டிவிடுவார்கள்.அந்த சல்லிக்காசை காளையோடு மல்லுக்கட்டி எடுப்பதே சல்லிக்கட்டு என்று அழைக்கப் பட்டது என்றும் கூறப்படுகிறத.சல்லிக்கட்டு என்பது தொன்மை குடி மரபு வழி விளையாட்டுகளில் ஒன்றாகும்.
- மதுரை, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் வாடிவாசல் வழியாக வெளியேறும் காளைகளை இளைஞர்கள் விரட்டிச்சென்று அதின் திமில் மீதி தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்கிறார்கள். வட தமிழகத்தில் மஞ்சுவிரட்டு என்ற பெயரில் 20 அடி நீளம் கொண்ட கயிற்றால் காளையைக் கட்டி, இருபுறமும் காளைகளை ஆண்கள் இழுத்துப் பிடிக்க ,ஒரு சிலர் மட்டும் அதன் முன்னே நின்று கொம்பில் உள்ள பரிசுப் பணத்தை எடுக்க முயல்வதே இந்த விளையாட்டின் சிறப்பு அம்சமாக கருதப் படுகிறது.ஒரு சில இடங்களில் பரிசுத்தொகை மாட்டின் கொம்புகளில் கட்டி வைக்காமல் கூட இருக்கலாம்.
- ஆனால், இதன் விதி என்னவோ காளையை அடக்குவது; காளையின் கொம்புகளை அல்லது காளையின் திமிலை பிடித்துக் கொண்டு மாட்டை அடக்கி ஆளுவது அல்லது மாட்டோடு சேர்ந்து ஓடி தன்னுடைய வலிமையை தன்னுடைய வீரத்தை காட்டுவதே ஆகும். இதன் மூலம் மாடுகளுக்கு எவ்வித இடர்பாடுகளும் ஏற்படாதவாறு நிகழ்த்த வேண்டும் என்பதே அறமாகும். ஒருவேளை காளைகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் நிச்சயம் இந்த ஜல்லிக்கட்டு நடக்காமல் நிறுத்தி வைக்கப்படும் என்பதே விதி.
- அன்றைய நாட்களில் காளையை அடக்கும் ஆண் மகனையே பெண்கள் மணந்து வந்தனர்.காளையை அடக்குபவர்களே வீரனாகவும் போற்றப்பட்டனர். அன்றைய நாளில், காளைகளை அடக்கும் ஆண்மகன்களுக்கு தங்களுடைய மகள்களை திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களே அதிகமாக காணப்பட்டனர். ஜல்லிக்கட்டு என்பது ஒரு வீர விளையாட்டாக இன்றளவும் திகழ்கிறது. மதுரை, அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் அன்றிலிருந்து இன்று வரை தமிழரின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு இன்றும் கடைபிடிக்கப்படுகிறது. அதற்காக பல தடைகள் வந்த போதிலும் கூட நம்முடைய பாரம்பரியம் தடைகளை தாண்டி வெற்றி நடை போட்டு கொண்டிருக்கிறது.
- காளையைக் கொடுமைப்படுத்தும், காளையை வதைக்கும் விளையாட்டு அல்ல ஜல்லிக்கட்டு. ஒரு மனிதர் காளையின் திமிலைப் பிடித்துக்கொண்டு 20-30 அடி தூரத்துக்கு, அதிகபட்சமாக 10-20 விநாடிகள் ஓடுவதுதான் ஜல்லிக்கட்டு. அதனால்தான் ஏறு தழுவுதல் எனப்பட்டது. வாய்ப்பிருந்தால், பரிசுத்தொகை கட்டப்பட்ட துண்டைக் கொம்பால் குத்தப்படாமல் அவிழ்ப்பதில்தான் ஜல்லிக்கட்டின் லாகவம் அடங்கியிருக்கிறது. சினிமா நாயகர்கள் போலியாகச் சித்தரிப்பதைப் போல, எந்த ஊரிலும் மாட்டைத் தனியாகப் பிடிக்க யாரும் முயற்சிப்பதில்லை; கொம்பைப் பிடித்து அடக்க முயற்சிப்பதும் இல்லை. காளைகளைப் போற்றும் திருவிழா ஜல்லிக்கட்டு. ஒரு காளை ரத்தம் சிந்தினால்கூட ஜல்லிக்கட்டு நிறுத்தப்படும் என்பது விதி.
- பொலி காளைகள்தான் ஜல்லிக்கட்டில் விடப்படுகின்றன. வெற்றி பெறும் காளைகள் உள்ளூர் பசுக்களுடன் இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தப் படுகின்றன. இந்த இரண்டு அம்சங்களுக்காக மட்டுமே அவை பயன்படுத்தப்படுகின்றன. கிராமங்களில் கோயில் காளைகள் இலவசமாக இனச்சேர்க்கைக்குப் பயன்படுத்தப்படுகின்றன. ஜல்லிக்கட்டில் இயல்பாக வெற்றிபெறுபவை மரபணுரீதியில் வீரியமிக்க காளைகளே. இதன் மூலம் உள்ளூர் மாட்டினங்களின் மரபணு வளம் பராமரிக்கப்படுகிறது. வீரியமிக்க காளைகளின் குட்டிகளையே விவசாயிகள் அதிகம் விரும்புகிறார்கள். அந்த வகையில் ஒரு பகுதியிலுள்ள காளைகளை, ஊருக்குக் காட்சிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு ஜல்லிக்கட்டு.
- அதன் தொடர்ச்சியாக மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் மாட்டுச் சந்தைகள் நடப்பதைக் கவனிக்க வேண்டும்.
- ஜல்லிக்கட்டு என்பது நம் தமிழரின் மரபை எடுத்துக் கூறும் ஓர் பாரம்பரியம் ஆகும். மாடு வீட்டு விலங்காக பழக்கப் படுத்தப்பட்ட தொன்மையான நாகரீகங்களில் முதன்மையானது இந்தியா. ஆயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்திய உள்ளூர் மாட்டினங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. காலப் பழமையால் பல்வேறு மாற்றங்களுடன் சமூக நிலைகளுக்கு ஏற்பவும் இவ்வீர விளையாட்டு நிகழ்த்தப்படுகிறது.இது தொன்மையான மற்றும் மக்களின் பண்பாடு சார்ந்தது என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.. பல நூற்றாண்டு தாண்டி நிற்கும் தமிழினத்தின் அடையாளம் ஜல்லிக்கட்டு.