குட்கா முறைகேடு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 12 பேர் வழக்கு பதிவு செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் கடந்த 2017-ம் ஆண்டு சட்ட விரோதமாக தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை தொடர்பாக அமைச்சர், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு, குட்கா குடோன் உரிமையாளர்கள் மாதவ ராவ், பங்குதாரர்கள் சீனிவாச ராவ் உட்பட 6 பேரை சிபிஐ கைது செய்தது. இவர்களுக்கு சொந்தமான ரூ.246 கோடி சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.
இந்த முறைகேட்டில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேர் வழக்கு பதிவு செய்ய அனுமதி அளிக்க கோரி சிபிஐ சார்பில் கடந்த வாரம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.
இந்நிலையில், 12 பேர் மீதும் சிபிஐ வழக்கு பதிவு செய்ய தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கின் பின்னணி:
சென்னை புறநகரில் உள்ள எம்டிஎம் என்ற பான் மசாலா நிறுவனத்தில் வருமானவரித் துறையினர் கடந்த 2016-ம் ஆண்டு நடத்திய சோதனையில் அந்நிறுவனம் ரூ.250 கோடி வரி ஏய்ப்பு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின்போது கைப்பற்றப்பட்ட டைரியின் மூலம், குட்காவை தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்ய அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், வணிக வரித்துறை அமைச்சர் பி.வி.ரமணா, முன்னாள் டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் சென்னை மாநகர காவல் ஆணையர் ஜார்ஜ் மற்றும் காவல்துறை, உணவு பாதுகாப்புத் துறை, வணிகவரித் துறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
அதையடுத்து இந்த குட்கா ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் மத்திய கலால் வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், ‘‘டெல்லியில் உற்பத்தி செய்யப்பட்ட குட்கா பொருட்கள் சட்டவிரோதமாக தமிழகத்துக்கு கொண்டு வர ரூ.55 கோடி ஹவாலா முறையில் பணப்பரிமாற்றமும், பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பும் நடந்துள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.
அதேபோல, வருமானவரித் துறை புலனாய்வு பிரிவின் முதன்மை இயக்குநர் சுசிபாபு வர்கீஸ் தாக்கல் செய்திருந்த பதில்மனுவில், ‘‘தமிழகத்தில் குட்காவை சட்டவிரோதமாக பதுக்கி கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதாகக் கிடைத்த தகவலின்பேரில் மாதவராவ், சீனிவாச ராவ் மற்றும் உமாசங்கர் குப்தா ஆகியோர் பங்குதாரராக உள்ள செங்குன்றம் குட்கா குடோனில் கடந்த 08.07.16 அன்று சோதனை நடத்தப்பட்டது.
அப்போது எங்களுக்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் இந்த ஊழலில் தொடர்புடைய முக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்போதைய தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு தனித்தனியாக ரகசிய கடிதம் அனுப்பப்பட்டது. கடந்த 01.04.16 முதல் 15.06.16 வரையிலான ஒன்றரை மாதத்தில் மட்டும் சுகாதாரத் துறை அமைச்சருக்கு ரூ.56 லட்சம் லஞ்சமாக கொடுக்கப்பட்டுள்ளதாக மாதவராவ் தெரிவித்துள்ளார்.
கடந்த 17.11.17 அன்று போயஸ் தோட்டத்தில் வி.கே.சசிகலா அறையில் நடந்த வருமானவரித் துறை சோதனையின்போது, குட்கா ஊழல் தொடர்பாக அப்போதைய டிஜிபி மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நாங்கள் அனுப்பிய ரகசிய கடிதம் கைப்பற்றப்பட்டது’’ என தெரிவித்திருந்தார்.
அதையடுத்து இந்த வழக்கை விசாரித்த, அப்போது தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘சமுதாயத்துக்கு தீங்கு விளைவிக்கும் குட்காவை ஒழித்தே தீரவேண்டும். அதை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இந்த வழக்கில் அமைச்சர்கள், டிஜிபிக்கள் மற்றும் உயரதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றுகிறோம்’’ என கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டனர்.
இந்த ஊழல் தொடர்பாக முன்னாள் தலைமைச் செயலரான பி.எஸ்.ராமமோகனராவ், ‘‘இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அறிக்கை அனுப்பியதாகவும், ஆனால் அந்த கோப்பின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’’ என ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ புதுடெல்லி ஊழல் தடுப்புப் பிரிவு, இந்த குற்றச்சாட்டில் சிக்கியுள்ள முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் வணிகவரித் துறை அமைச்சர் பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபி-க்கள் டி.கே.ராஜேந்திரன், எஸ்.ஜார்ஜ் உள்ளிட்ட 12 பேருக்கு எதிராக சட்டரீதியாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முன்அனுமதி கோரி தமிழக அரசுக்கு தற்போது கடிதம் அனுப்பியது.
இந்த ஊழல் வழக்கில் முதற்கட்டமாக குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ், பங்குதாரர்கள் சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி என்.கே.பாண்டியன், சுகாதாரத் துறை ஆய்வாளர் சிவக்குமார் ஆகிய 6 பேரையும் ஏற்கெனவே சிபிஐ கைது செய்து, அவர்கள் மீது கடந்த 2018-ம் ஆண்டு குற்றப்பத்திரிகையையும் தாக்கல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் டிஜிபிக்கள் உள்ளிட்டோருக்கு எதிராக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசின் அனுமதி கிடைத்துள்ளதால் சிபிஐ இந்த வழக்கில் அதிரடி வேகம் காட்டும் என தெரிகிறது.