Site icon ழகரம்

துபாய் புறப்பட்டுச் சென்றார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

4 நாள் அரசு முறை பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துபாய் புறப்பட்டுச் சென்றார்.

துபாயில் 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சியில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி விமானத்தில் துபாய் புறப்பட்டார். தமிழகத்தை தொழில்துறையில் முதலிடத்துக்குக் கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதற்கு ஆதாரமாக முதலீடுகளை அதிக அளவில் ஈர்க்க, தமிழகத்தின்உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிதாக்கி அதற்கான இணையதள வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச கண்காட்சி: 192 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச கண்காட்சி துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் உள்ள அரங்குகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் திறந்து வைத்தார். இதில், தமிழக அரசு சார்பில் கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் பெருந்தொழில்கள் பற்றிய அரங்கம் அமைக்கப்பட உள்ளது. இந்த அரங்கத்தின் மூலம் தமிழகத்தில் தொழில் தொடங்க முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளது.

இந்தக் கண்காட்சியில் பங்கேற்று முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விமானம் மூலம் துபாய் புறப்பட்டார். அவருடன், சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 15 பேர் சென்றுள்ளனர்.

முதல் அயல்நாட்டு பயணம்: தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வரான பின் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ளும் முதல் அயல்நாட்டு பயணம் இது. துபாய் பயணத்தை முடித்துக் கொண்டு, வரும் 27-ம் தேதி முதல்வர் சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, துபாய் செல்வதற்காக விமான நிலையம் வந்த முதல்வரை வழியனுப்ப அமைச்சர்களும், ஏராளமான தொண்டர்களும் வருகை தந்திருந்தனர். அமைச்சர்களிடம் சிறிதுநேரம் கலந்துரையாடிய முதல்வர், பின்னர் புறப்பட்டுச் சென்றார்.

Exit mobile version