கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிக்கிறது – உச்சநீதிமன்றம் கருத்து
Editor Zhagaram
கட்டாய மதமாற்றம், மிகப்பெரிய பிரச்னை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என்றும் எச்சரித்துள்ளது
தனி நபருக்கு மதசுதந்திரம் இருக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஆனால் கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மூட நம்பிக்கை, கட்டாய மதமாற்றம் மற்றும் மாந்தீரக செயல்கள் ஆகியவற்றை மத்திய அரசும் மாநில அரசுகளும் தடுத்து நிறுத்த உத்தரவிடக்கோரி பாஜக வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யாய் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்தியாவில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள் அளித்து கட்டாய மதமாற்றம் செய்வதாக அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். கட்டாய மதமாற்றம், மாந்தீரிக செயல்கள் ஆகியவை நாடுமுழுவதும் நடைபெறுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டாய மதமாற்றம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் மத்தியிலேயே அதிகம் நடப்பதாகவும், இது அரசியல் சட்டப்பிரிவுகள் 14, 21, 25 ஆகியவற்றுக்கு எதிரானது மட்டுமல்ல, மதசார்பின்மைக்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்றும் அஸ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் பி.ஆர் ஷா, ஹிமா கோலி அமர்வில் நடைபெற்றது. அப்போது, கட்டாய மதமாற்றம் நாட்டை மட்டுமல்லாமல், தனிநபர் மத சுதந்திரத்தையும் பாதிப்பதாக நீதிபதிகள் கூறினர். நாட்டின் பாதுகாப்புக்கு கட்டாய மதமாற்றம் அச்சுறுத்தலாக உள்ளதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு மற்றும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தனி நபருக்கு மதசுதந்திரம் இருக்கலாம் என்று குறிப்பிட்ட நீதிபதிகள், ஆனால் கட்டாய மதமாற்றம் செய்ய யாருக்கும் சுதந்திரம் இல்லை என்றும் கூறினர். மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, கட்டாய மதமாற்ற விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு தனிச்சட்டம் உள்ளதாக தெரிவித்தார். ஓடிஷா மற்றும் மத்திய பிரதேசத்தில், அரிசி மற்றும் கோதுமை பொருட்களை கொடுத்து மதமாற்றம் செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனை கேட்ட நீதிபதிகள், கட்டாய மதமாற்றம் நடைபெறுவதை மத்திய அரசு ஒப்புக்கொள்வதாக கூறினர். மத்திய அரசு 22- ஆம் தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை 28- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.