முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான ரூ.4,800 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நெடுஞ்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடைபெற்ற டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக ஒட்டன்சத்திரம் – தாராபுரம் – அவினாசிபாளையம் நான்கு வழிச் சாலைக்கான திட்ட மதிப்பீடு ரூ.713.34 கோடியாக இருந்த நிலையில், அந்த திட்டத்துக்கான நிதி ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டு அதற்கான ஒப்பந்தம் பழனிசாமியின் உறவினரான ராமலிங்கம் என்பவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி – செங்கோட்டை – கொல்லம் நான்குவழிச் சாலையை விரிவுபடுத்தி பலப்படுத்தும் ரூ.720 கோடிக்கான ஒப்பந்தம், வெங்கடாஜலபதி அன்ட்கோ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இதே நிறுவனத்துக்கு ரூ.200 கோடி மதிப்புள்ள மதுரை ரிங் ரோடு ஒப்பந்தமும் வழங்கப்பட்டுள்ளது.
முதல்வராக பதவி வகித்த பழனிசாமி, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இந்த டெண்டர்களை வழங்கியுள்ளார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த வழக்கை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டிருந்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 2018-ம் ஆண்டு விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள இந்த வழக்கை விரைந்து விசாரணைக்கு பட்டியலிடக் கோரி தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா முன்பு நேற்று முறையீடு செய்யப்பட்டது.
இதையடுத்து, பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் இன்று (ஜூலை 26) விசாரணைக்கு வருகிறது.