முத்தலாக் விவாகரத்து முறையைத் தொடர்ந்து, தலாக் இ ஹசன் நடைமுறையையும் தடை செய்ய உத்தரவிட கோாி, உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் பெனாசீர் ஹீனா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
முஸ்லிம்கள் பின்பற்றும் தலாக் இ ஹசன் விவாகரத்து முறையால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த தலாக் இ ஹசன் முறையால் பல பெண்களும் குழந்தைகளும் பாதிக்கப்படுவதாகவும் கூறி, முத்தலாக் விவாகரத்து முறையை தடை செய்தது போல அதையும் தடை செய்ய வேண்டும் என்று பெனாசீர் ஹீனா கூறியுள்ளார். தலாக் இ ஹசன் என்பது, முத்தலாக் போன்ற மற்றொரு விவாகரத்து முறை ஆகும். முத்தலாக் முறையில், ஒரே நேரத்தில் மூன்று முறை `தலாக்’ என்று கூறி கணவன் – மனைவிக்கு இடையே விவாகரத்து மேற் கொள்ள முடியும். அதுவே தலாக் இ ஹசன் முறையில், 3 மாத காலத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு முறை `தலாக்’ என்று கூறுவதன் மூலம் விவாகரத்து நடைமுறையை மேற்கொள்ளலாம்.
ருவேளை மூன்றாவது மாதம் `தலாக்’ சொல்வதற்குள் கணவன், மனைவி சமாதானம் செய்து கொண்டால், முன்னர் சொன்ன இரண்டு `தலாக்’குகளும் செயலிழந்துவிடும். போலீஸில் பெனாசீர் புகார் அளித்த போது, ஷரியா சட்டப்படி (இஸ்லாமியர்களுக்கான சட்டம்), அந்த முறை விவாகரத்து செல்லும் என்று கூறப்பட்டதாகத் தெரிகிறது. இந்நிலையில்தான், தலாக் இ ஹசன் நடைமுறையை தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் பெனாசீர். இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கவுல் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் கூறும்போது, ‘‘ முஸ்லிம் பெண் ஒருவர் தன் கணவனிடம் இருந்து பெற்ற வரதட்சணை (மஹர்) அல்லது வேறு எதையாவது திருப்பித் தருவதன் மூலமோ அல்லது எதையும் திருப்பித் தராமலோ, வாழ்க்கைத் துணைவர்கள் அல்லது காதியின் (நீதிமன்ற) ஆணையின் மூலம் சூழ்நிலைகளைப் பொறுத்து விவாகரத்து பெற முடியும்.
ஆனால் தலாக்-இ-ஹசன் விவாகரத்து முறை அவ்வளவு முறையற்றதல்ல என்று தெரிய வருகிறது. எனவே, முஸ்லிம் பெண்களுக்கு மற்றொரு வாய்ப்பு உள்ளது. அதாவது, கணவர்களை விவாகரத்து செய்யும் குலா முறைதான் அது. நான் மனு தாரரின் முகாந்திரத்துடன் உடன்படவில்லை. வேறு எந்த காரணத்திற்காகவும் இது ஒரு நிகழ்ச்சி நிரலாக மாறுவதை நான் விரும்பவில்லை” என்றார்.
அப்போது பெனாசீர் ஹீனா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பிங்கி ஆனந்த், அஸ்வனி குமார் துபே வாதிடும்போது, “தலாக் போன்ற தலாக் இ ஹசன் உள்ளிட்ட பல்வேறு விவாகரத்து நடைமுறைகள், சமூகத்துக்கு தீயவையாகும். சதி போன்ற உடன்கட்டை ஏறுதல் கொடுமையைப் போன்றதாகும். மேலும், தலாக்-இ-ஹசன் தன்னிச்சையானது, பகுத்தறிவற்றது ஆகும். மேலும், அரசியலமைப்பு சட்டப் பிரிவுகள் 14, 15, 21 மற்றும் 25 மற்றும் சிவில் உரிமைகள், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச மரபுகளுக்கு முரணானது. இந்த தலாக் இ ஹசன் வழக்கமானது, மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்துவத்தின் நவீன கோட்பாடுகளுடன் இணக்கமாக இல்லை. இஸ்லாமிய நம்பிக்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக இல்லை” என்றனர். இதைத் தொடர்ந்து வழக்கை நீதிபதிகள் ஆகஸ்ட் 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.