போக்குவரத்துக் கழகங்களுக்கு எதிரான வழக்குகளில் அவற்றின் வழக்கறிஞருக்கு உதவும் வகையில், ஒருங்கிணைப்பு அதிகாரியை நியமிக்க வேண்டுமென அனைத்து நிர்வாக இயக்குனர்களுக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டம் சோமந்தர்குடியை சேர்ந்த பி.நடராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற தனக்கு வரவேண்டிய பென்சன் உள்ளிட்ட பணப் பலன்கள் வழங்கபடவில்லை. பணிக்கொடை, சேம நல நிதி, ஈட்டு விடுப்புத் தொகை ஆகியவற்றையும் வழங்கவில்லை. எனவே தனக்கு சேர வேண்டிய பணிக்கால மற்றும் ஓய்வுகால பலன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டுமென 2018-ம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் விழுப்புரம் கோட்ட அதிகாரிகள் தரப்பில் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ஆர். சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போக்குவரத்து கழகம் தரப்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், “இதுபோன்ற கோரிக்கையுடன் தொடரப்படும் பல்வேறு வழக்குகளில் போக்குவரத்து கழகங்களின் தரப்பில் வழக்கறிஞர்களோ, சட்ட அதிகாரிகளோ ஆஜராவதில்லை. இதுபோன்ற வழக்குகளில் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாமல் ஒரு முடிவை எட்ட முடியாது. இது நீதி பரிபாலனம் செய்வதில் பாதிப்பைத் தான் ஏற்படுத்தும்.
இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு அரசு போக்குவரத்து கழகங்களுடன் தொடர்புடைய ஒவ்வொரு வழக்கிலும், அதன் நிர்வாக இயக்குனர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். இதுபோன்ற குறைபாடுகளை கலைவதற்கும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞருக்கு உதவவும் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற முதன்மை அமர்வின் எல்லைக்குட்பட்ட அனைத்து போக்குவரத்துக் கழக கோட்டங்களின் நிர்வாக இயக்குனர்களின் கவனத்திற்கும் கொண்டு செல்லும் வகையில், இந்த உத்தரவை அவர்களுக்கு அனுப்பி வைக்கும்படி உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.