திமுகவின் முன்னாள் அமைச்சர் மறைந்த தங்கபாண்டியனின் பேத்தியும், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனின் மகளுமான நித்திலா சந்திரசேகர் திருமணத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் மகளுக்கும் திமுக தகவல் தொழில்நுட்ப அணி இணைச் செயலாளர் டாக்டர் மகேந்திரன் மகனுக்கும் சென்னையில் இன்று காலை திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், திமுகவில் இளைஞரணி என்று புதிய அணியை உருவாக்குவது குறித்தும் யாரை பொறுப்பாளராக நியமிக்கலாம் என்பது பற்றியும் அப்போதைய மாவட்டச் செயலாளர்களிடம் கருணாநிதி ஆலோசனை நடத்திய போது, ஸ்டாலினை திமுக இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டும் என முதல் குரல் கொடுத்தவர் தமிழச்சியின் தந்தை தங்கபாண்டியன் என பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டார் ஸ்டாலின்.
மேலும், 2007-ம் ஆண்டு நெல்லையில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டின் போது மாநாடு கொடியை ஏற்ற யாரை அழைக்கலாம் என கருணாநிதியிடம் தாம் ஆலோசித்த போது, அவர் தங்கபாண்டியன் மகள் சுமதியை அழைக்குமாறு கூறினார்.
சுமதி என்று இருந்த பெயரை கலைஞர் தான் தமிழச்சி என மாற்றியதாகவும் தமிழச்சி தங்கபாண்டியன் என்ற பெயரில் இளைஞரணி மாநாட்டு விளம்பரத்தை கொடுக்குமாறும் கலைஞர் தன்னிடம் கேட்டுக்கொண்டதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.
இதனிடையே அதிமுக ஆட்சிக்காலத்தில் 2001-2006 காலகட்டத்தில் நாமக்கல் மாவட்டத்தில் திமுக கொடியேற்ற தாம் சென்ற போது, அதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதும் அதனை மீறிச் சென்று கொடியேற்றி வைத்ததாக கூறிய ஸ்டாலின், அதற்காக அப்போது தன்னை கைது செய்தவர் தான் தமிழச்சி தங்கபாண்டியனின் கணவர் (சந்திரசேகருக்கு அப்போது நாமக்கல் மாவட்டத்தில் பணி) என பிளாஷ்பேக் தகவலை பகிர்ந்தார்.