முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம்!
- 2009 ஆண்டு மே திங்கள் 17, 18, 19 ஆகிய நாட்களில் மாந்தரினமான தமிழினத்தின் நீண்டநெடிய வரலாற்றில் நிகழ்ந்திராத அவலம் நிகழ்ந்து ஆண்டுகள் பல உருண்டோடிவிட்டன. வீரமே ஆரமாகவும் ஈகமே அணியாகவும் பூண்டு வரலாற்றில் தன்னிகரற்ற முத்திரை பொறித்த தமிழினம் இந்த அவலத்தின்போது கையறுநிலையில் அழுது புலம்பி நின்றது. காலத்தை வென்ற செவ்விலக்கியங்களைப் படைத்து உலக இலக்கிய வரிசையில் முன்னிடம் பெற்று நிகரற்றுத் திகழ்ந்தனர்
- தமிழர்! வடக்கே இமயம் முதல் தெற்கே ஈழம் வரையிலும், கிழக்கே கடல் கடந்த நாடுகளிலும் பகைவர் அஞ்சி ஒடுங்கும் வகையில் அடலேறுகளாகத் திகழ்ந்தனர் தமிழர்!
பெருமைக்குரிய தமிழினம் இன்று தலைதாழ்ந்து தேம்பிக் கிடக்கும் இழிநிலை உருவானது ஏன்? எதனால்?
- தமிழர் வரலாற்றில் இதுவரை நடந்திராத வகையில் தமிழீழத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் 140000க்கும் மேற்பட்ட தமிழர்கள் பதைக்கப் பதைக்கப் படுகொலை செய்யப்பட்டர்கள்.
- ஈழத்தில் இருந்து 20 கல் தொலைவில் இக்கரையில் தமிழ்நாட்டில் ஏழரைக் கோடித்தமிழர்கள் வாழ்ந்தும் கூட அந்த இனப்படுகொலைகளைத் தடுத்து முடியவில்லை. இவ்வளவு பெருந்தொகையினரான தமிழர்கள் மிக அருகில் வாழ்கிறார்கள். அவர்கள் கொதித்தெழுந்தால் நம் நிலைமை என்னாகும் என்ற அச்சம் சிங்கள வெறியர்களுக்கு அறவே இல்லை. ஒட்டு மொத்தத் தமிழகமும் கொதித்தெழுந்து போராடத் தவறியதன் விளைவே இதுவாகும்.
- இந்தப் படுகொலைகளை இந்தியாவோ, உலக நாடுகளோ கண்டிக்க முன் வராத நிலையில் சிங்கள வெறியர்கள் மேலும் துணிவு பெற்று அடுத்தக்கட்ட அழிவில் ஈடுபட்டனர்.நாகரீக நாடுகள் எதிலும் இதுவரை செய்யப்படாத கொடுஞ்செயல் ஒன்றினை துணிந்து செய்தார்கள். தமிழீழத்தில் நிறுவப்பட்டிருந்த மாவீரர் நினைவு இல்லங்களை அடியோடு தகர்த்து, கல்லறையில் துயின்ற மாவீரர்களின் எலும்புகளைக் கூட விடாமல் தோண்டி எடுத்து அழித்தனர் சிங்கள வெறியர்கள்.
- சிங்கள வெறியர்களின் மேற்கண்ட செயல்கள் உலகத் தமிழர்களின் உள்ளங்களில் என்றும் ஆறாத புண்களாகின. இந்தப் புண்களை ஆற்றும் முயற்சியாக எழுந்ததுதான் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றமாகும்.
- தமிழீழத்தில் அழிக்கப்பட்டுவிட்டாலும் தமிழகத்திலேயாவது ஈழத்தமிழ் ஈகிகளின் நினைவுச் சின்னம் நிறுவப்பட வேண்டுமென உலகத் தமிழர் பேரமைப்பு முடிவு செய்தது.
- முள்ளிவாய்க்கால் மக்கள் நினைவாகவும், ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து தமது உயிர்களை ஈகம் செய்தவர்கள் நினைவாகவும், இரு ஈகத் தூண்கள் அமைப்பதென முதலில் முடிவு செய்யப்பட்டது.
- 02-06-2010 அன்று தஞ்சையில் இவற்றுக்கான அடிக்கல் நாட்டும் விழா நடைபெற்றது. திரு. பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் முள்ளிவாய்க்கால் மக்கள் நினைவுத்தூணின் கால்கோள் விழாவை திரு.வைகோ அவர்கள் நாட்டினார். முனைவர் ம.நடராசன் தலைமையில் ஈழ ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்த ஈகிகளுக்கான நினைவுத் தூணின் அடிக்கல்லை திரு. இரா.நல்லகண்ணு அவர்கள் நாட்டினார்.
- நினைவுத் தூண்களை நிறுவும் திட்டம் முனைவர் ம.நடராசன் கொடைத் தன்மை நிறைந்த பெருந்தகைகள் மூலம் நினைவு முற்றமாகப் பெரியதொரு வடிவம் எடுத்தது.
- தமிழ்நாட்டிலும் தமிழீழத்திலும் காலூன்ற ஆங்கிலேய வல்லாதிக்கம் முயன்ற காலத்தில் அதை எதிர்த்துத் துணிவுடன் போராடி மாண்டு மறைந்த மாவீரர்கள், தமிழிழ விடுதலைப் போரில் களத்தில் புகழை நிலை நிறுத்தி மண்ணில் வீழ்ந்து பட்ட மாவீரர்கள், தமிழ்நாட்டில் ‘மொழிகாக்கும் போரில் உயிர் ஈகம் செய்த மானமறவர்கள் மற்றும் தீக்குளித்துத் தங்களை அழித்துக்கொண்ட ஈகிகள் ஆகிய அனைவரின் நினைவைப் போற்றும் வகையில் முள்ளிவாய்க்கால் முற்றம் தஞ்சையில் எழுப்பப்பட்டுள்ளது.