சிவகங்கைச் சீமையிலே மருது பாண்டியருக்கு அளவில்லாத செல்வாக்கு இருந்தது. அவர்கள் கிழித்த கோட்டை எந்த மறவனும் தாண்டான். அவர்கள் ஆணைக்கு ஆயிரக்கணக்கான மறவர் ஆர்வத்தோடு காத்திருப்பர். ‘விழு நெருப்பில்!’ என்றால், மகிழ்ச்சியோடு விழுந்து சாவர் பலர். அத்தகைய அன்பு படைத்த மக்களையும் மறவர் சேனையையும் அவ்வீரர்கள் பெற்றிருந்தார்கள்.
ஆரம்பத்தில் சிவகங்கை மன்னரது படையைச் சார்ந்த போர் வீரர்களாகவே பெரிய மருதுவும் சின்ன மருதுவும் நமக்குக் காட்சி அளிக்கிறார்கள். ஆயினும், தங்கள் நெஞ்சுரத்தாலும், நேர்மைப் பண்பாலும், நுட்ப மதியாலும், நன்றி உணர்ச்சியாலும் இவ்வுடன் பிறப்பாளர் இருவரும் நாளடைவில் இணையில்லா அரசியல் செல்வாக்குப் பெற்று விட்டனர்; நாடாளும் மன்னனோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பை நாளுக்கு நாள் மிகுதியாக்கிக் கொண்டு, அரசனையும் விஞ்சிய புகழ்ச் செல்வர்களாய் விளங்கினார்கள். இறுதியில் தள்ளாத வயதினனாய் இருந்த முத்து வடுகநாதன் எதற்கும் மருது பாண்டியர்களையே நம்பி வாழும் நிலை ஏற்பட்டது.
மருது பாண்டியரும் இந்த நம்பிக்கைக்கு அணுவளவும் மாறின்றி அரசரும் குடிமக்களும் ஒருங்கே புகழும்படி நாட்டாட்சியில் அறிவுரை கூறும் அமைச்சர்களாயும், நாட்டு மக்களைப் போர்ப்பயிற்சியில் தலை சிறந்தவர்களாக்கப் பாடுபடும் சிறந்த தளபதிகளாயும் விளங்கினர். தங்கள் நாட்டில் இருந்த மறவர், அகம்படையர், சேர்வைகள், முதலிமார், பிள்ளைமார், இராசாக்கள், நாயுடுகள் அனைவரையும் கூட்டிப் போர்ப்பயிற்சி தந்தார்கள் மருது பாண்டியர்கள். அவர்களுடன் எப்போதும் இருபதாயிரம் வீரர் எதற்கும் தயாராய் இருந்தனர்.
இந்நிலையிலேதான் சிவகங்கைச் சீமைக்குச் சோதனை நிறைந்த காலம் தொடங்கிற்று. நாம் சிவகங்கைச் சீமையைப் பற்றியும், அதை ஆண்ட முத்து வடுகநாதப் பெரிய உடையணத் தேவனைப் பற்றியும், ‘யூனியன் ஜாக்கி’ன் நிழலில் நின்று கொண்டு ஆர்க்காட்டு நவாபு செய்து வந்த தர்பாரையும் அவன் புரிந்த அநீதிகளையும் பொறுக்க முடியாமல் வீர மறவர்கள் நெஞ்சம் குமுறிக் கொண்டிருந்த செய்தியைப் பற்றியும் முன்பே படித்திருக்கிறோம்.
‘கப்பம்’ என்று கேட்ட தனக்குக் கத்தியை உருவிக் காட்டிய மறவர்கள், தன்னையும் தனக்குத் துணையாய் நிற்கும் கம்பெனிக் கூட்டத்தையும் நாசமாக்கச் செய்யும் முயற்சிகளை அறிந்து சீற்றம் கொண்ட நவாபு சேனை ஜோசப்பு ஸ்மித்து என்பான் தலைமையில் இராமநாதபுரத்தைக் கைப்பற்றிய செய்தியையும் அறிந்திருக்கிறோம் அல்லவா? அதற்குமேல் நடந்தவற்றைப் பார்ப்போம்.
ஜோசப் ஸ்மித்து வெற்றித் திமிரோடும், நவாபு சேனையோடும், பிற கூலிப் படைகளோடும் சிவகங்கைச் சீமையை நோக்கிச் சீறி வருவதை அறிந்தான் முத்து வடுகநாதன். அவன் மீசை துடித்தது; கண்கள் சிவந்தன; அவன் தன் இரு கண்கள் போன்ற மருது பாண்டியரைப் பார்த்தான். “அரசே! அஞ்ச வேண்டா! அந்நியப் படையின் அடிச்சுவடும் காணாத வகையில் அவர்களைக் கண்ட துண்டமாக வெட்டிப் புதைப்போம்!’ என்று அண்ணனும் தம்பியும் ஒரே குரலில் உரைத்தனர்.
மருது பாண்டியரின் நெஞ்சுறுதியைக் கண்டு முத்து வடுகநாதன் மகிழ்ச்சி கொண்டான். அவனது மகிழ்ச்சியை இரு மடங்காக்கினாள் அவனுடைய் வீரபத்தினியான வேலு நாச்சி என்பாள். ஆம்; முத்து வடுகநாதனுக்கு வாழ்க்கைத் துணைவியாய் அமைந்த வேலு நாச்சி, வீர நெஞ்சம் படைத்தவள்; சின்ன மருதுவிடம் போர்க் கருவிகளைப் பயன்படுத்தும் கலையைக் கசடறக் கற்றவள்.
அத்தகைய பெண் மணியின் நெஞ்சில் ஆண்மை பொங்காது இருக்குமோ? ‘தலைவரே, தொடுங்கள் போரை! தமிழகத்தின் மானத்தைக் காக்க இந்தப் பெண் இரத்தமும் பயன்படட்டும்!’ என்று அவள் உள்ளம் கருதியதைத் தன் கணவனிடம் வீரமொழிகளால் உணர்த்தினாள். வீரிட்டு எழுந்தான் முத்து வடுகநாதன். தன் தலைநகரை விட்டுக் காளையார் கோயில் காட்டில் புகுந்து கொண்டான். காரணம், அது கட்டுக்காவலும் வலிமையும் பொருந்தியதோர் அரணாய் விளங்கியதே ஆகும். எளிதில் எவரும் அதனுள் புகுந்து வெற்றி பெறல் அரிது. இதை நன்குணர்ந்த நவாபு புதுக்கோட்டை மன்னனுக்கும் ஆசை மொழி சொல்லி, அவனையும் தன் உதவிக்கு வரும்படி அழைத்தான்.
கம்பெனிப் படையைக் கர்னல் பான்ஷோர் என்பவன் நடத்தி வந்தான்.காசாசை பிடித்த ஒரு கயவன் காளையார் கோவில் அரண் பற்றிய உளவுகளையெல்லாம் பகைவர்க்குத் தெள்ளத்தெளிய எடுத்துரைத்து விட்டான். அவனைக் காசால் அடித்து மயக்கி வைத்திருந்த நவாபுவின் சேனையும் கம்பெனிப் படையும் புயலெனச் சீறி அரணுக்குள் பாய்ந்தன. துரோகியின் செயலையும் பகைவர்களது வெற்றியையும் கண்ட முத்து வடுகநாதன் உள்ளம் எரிந்தது. ‘பகைவரை வெட்டி வீழ்த்துங்கள்! குண்டுக்குக் குண்டு! குத்துக்குக் குத்து! வெட்டுக்கு வெட்டு! நடக்கட்டும்!’ என்றான் முத்து வடுகநாதன். அரசி வேலு நாச்சியும் கொடி பிடித்துக் குதிரைமீதேறி முன்னின்று, ‘உம்ம்….சாடுங்கள்! சிதையுங்கள் பகைவரை!’ என்றாள். அவ்வீர மங்கை பற்றிய கைவாள் கணக்கற்ற ஏகாதிபத்திய வெறியர்களுடைய தலைகளை வெட்டிக் குவித்தது. கண்டனர் இக்காட்சியை வீரமறவர்! அவர்கள் குருதி கொப்பளித்தது. அவர்கள் மாற்றார் படையைச் சின்னபின்ன மாக்கினார்கள்.
இந்நிலையில் மருது சகோதரர்கள் தங்கள் கை வாளாலும், வளரித் தடியாலும், கதையாலும் மாற்றார் படை வீரர்களைப் பிண மலைகளாக்கிக் குவித்தார்கள். ஆயினும், துரோகிகள் சதி, புதுக்கோட்டையான் படை, நவாபுவின் சேனை, ஆயுத பலம் நிறைந்த கம்பெனிப் பட்டாளம் – இவை அனைத்தும் சேர்ந்து தாக்கும்போது கோட்டையின் கதி என்னாகும்! மதில்கள் இடிந்தன. கோட்டை வாயில் பகைவர் வயமாயிற்று. நிலைமையறிந்த சின்னமருது, முத்து வடுகநாதன் காதோடு காது வைத்துப் பேசினான்; அரசரே! கிளம்புங்கள்! ஏற்பாடுகள் தயார்! தப்பிச் செல்வோம்! படை திரட்டிப் பின்னர்த் தாக்குவோம்!” என்றான். முத்துவடுகநாதன், ‘முடியாது! ஒரு நாளும் முடியாது! நீங்களும் அரசியும் எப்படியாவது தப்பிச் செல்லுங்கள்.
நான் என் நாட்டை விட்டு வெளியேறேன்! கடைசிச் சொட்டுக் குருதி உள்ளவரை மாற்றானது மார்பை, மண்டையைப் பிளந்து போராடுவேன்! வெற்றி அல்லது வீரச்சாவு அடைவேன்! என் உடல் சிந்தும் ஒவ்வொரு துளிக் குருதியிலிருந்தும் ஒரு விடுதலை வீரன் கிளம்புவான். எனவே, கவலை வேண்டா. புறப்படுங்கள்! அரசியைக் காப்பாற்றுங்கள்!” என்றான்.
இதற்குள் தலை சிறந்த அத்தமிழ் வீரனை நாற்புறமும் பகைவர் படைவளைத்துக் கொண்டது. ‘என்னைக் கைது செய்ய எமனாலும் இயலாது!’ என்று எட்டிப் பிடிக்க வந்த பகைவரை வெட்டி வீழ்த்தினான் முத்து வடுகநாதன்; கையில் கிடைத்த ஆயுதங்களை எல்லாம் பயன்படுத்திப் பகைவர் படையைக் கூறு கூறாக்கினான்; கருவிகள் யாவும் தீர்ந்த பின்னரும் கடுகி வந்த பகைவரைக் கையாலேயே குத்தினான்: வாளாலும் ஈட்டியாலும் வீரம் மிக்க கைகளாலும் வந்தவரை எல்லாம் எதிர்த்து, விண்ணுக்கு அனுப்பிய அவ்வீரமகனுடைய திருக்கரங்களை வெட்டித் தள்ளினார்கள் ஏகாதிபத்திய வெறியர்கள்.
‘கை போனால் என்ன!’ என்று பாய்ந்து வந்த பகைவரைக் கால்களால் எட்டி உதைத்தான் முத்து வடுகநாதன். கால்களும் துண்டிக்கப்பட்டன. அவன் களைத்தானில்லை. அடக்க வந்தவர்களைப் பற்களாற்கடித்து அலற வைத்தான். அவன் திருமுகத்தைத் தாக்கினர் கயவர். அப்போதும் அவ்வீரன் காறி உமிழ்ந்தான் வெறியர் கூட்டத்தைப் பார்த்து. இறுதியில் ஒரு குண்டுக்குத் தமிழகத்தின் விடுதலைக்காக இறுதி வரையிற் போராடிய வீர முத்து வடுகநாதன் பலியானான்! வீரருள் வீரனாய் வாழ்ந்த அத்தமிழ் மகனை நாம் என்றென்றும் நினைவில் வைத்துப் போற்றுவோமாக!
முத்து வடுகநாதன் மாண்டான். அவன் வீரபத்தினி வேலு நாச்சியும் மருது பாண்டியரும் திண்டுக்கல்லுக்குக் காற்றாய்ப் பறந்து சென்றனர். அப்போது திண்டுக்கல் மைசூர் ஆதிக்கத்தில் இருந்தது. பிரிட்டிஷ் அதிகாரத்தைத் தொலைக்க உறுதி பூண்டிருந்த ஐதர் அலி, அப்போது அங்கிருந்தான். அவன் மருது பாண்டியரையும் அரசி வேலு நாச்சியையும் வரவேற்றான்; அவர்கள் விடுதலை வேட்கையையும் வீர உணர்ச்சியையும் கண்டு வியந்து வாழ்த்தினான்.
இதற்குள் நவாபுவின் ஆளுகைக்கு இராமநாதபுரமும் சிவகங்கையும் இரையாயின. அப்பகுதியை அவன் எட்டு ஆண்டுகட்குக் குத்தகைக்கு விட்டான். கி.பி. 1780 ஆம் ஆண்டு வரை நவாபுவின் தர்பார் அந்த வகையில் நடந்தது மறவர் நாட்டிலே. ஆனால், நாட்டு மக்கள் மனம் குமுறிக் கொண்டிருந்தது. கனவிலும் நனவிலும் குடி மக்கள் தங்கள் அரச குடும்பத்தைப் பற்றியே நினைத்துக் கண்ணீர் சிந்தினார்கள். வீரமங்கை வேலு நாச்சி நாட்டை விட்டு வெளியேறியதையும், மருது பாண்டியர்கள் தங்கள் சீமையைப் பிரிந்து வாழ்வதையும் உணர்ந்த போதெல்லாம் அவர்கள் நெஞ்சம் காட்டு நெருப்பாய்க் கனன்று எரியத் தொடங்கியது.
இந்நிலையில் மருது பாண்டியர்களும் கை கட்டி வாளா இருக்கவில்லை. மறைமுகமாக அவர்கள் மறவர் நாட்டில் உள்ள மக்களோடு மறைவாகத் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தார்கள். குடிகளும் தங்கள் அரசிக்கு மறைவாகத் திறைப்பணம் அனுப்பி வந்தார்கள். அதனால், நவாபுவின் குதிரைக்காரனால் தம்படி கூட வசூலிக்க இயலவில்லை. நாட்டிலே வறுமையும் பஞ்சமும் தாண்டவம் ஆடின. கள்ளர்களடித்த கொள்ளை ஊரைக் கலகலக்க வைத்தது. அவர்களை அடக்குவது நவாபுவின் தர்பாரால் ஆகிற செயலா? சிவகங்கைச் சீமையில் நிலவிய இந்த நிலைமையே இராமநாதபுரத்திலும் நிலவியது. இறுதியில் வேறு வழியில்லாமல் நவாபு மறவர் நாடுகளைத் திரும்பவும் பழைய அரச குடும்பத்தினருக்கே திருப்பிக் கொடுத்துவிட நேர்ந்தது.
மீண்டும் வேலு நாச்சியே சிவகங்கைக்கு அரசியானாள். மருது சகோதரர்கள் அவர்களுக்கு அறிவொளி காட்டும் அமைச்சர்கள் ஆனார்கள். வெள்ளை மருது, நாட்டு அரசியல் பற்றி அதிகக் கவலை ஏதும் இன்றிப் பழையபடி “காட்டு ராஜா” ஆனான். அதனால், சின்ன மருதுவே நாட்டின் ஆட்சிக்கான முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. இந்நிகழ்ச்சிக்குப் பின் சிவகங்கைச் சீமையின் அரசியலில் பல முறை நவாபுவும் கம்பெனி அதிகாரிகளும் தலையிடுவதும், அதைத் தகர்க்க மருது பாண்டியர் எதிர்த்துப் போராடுவதுமான பல நிகழ்ச்சிகள் நடந்தன. அரசியல் நிருவாகம் வேலு நாச்சியின் கைக்கும் மருது பாண்டியர் கைக்குமாகப் பந்து போல மாறி மாறிச் சென்றது. காரணம், விதவையான அப்பெண்ணரசியால்
நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டின் நிருவாகப் பொறுப்பு முழுவதையும் தன்னந்தனியாக மேற்கொள்ள இயலாமையே ஆகும். மேலும், மருது பாண்டியர் வீரத்திலும் தியாகத்திலும் மக்களுக்கு அசைக்க இயலாத நம்பிக்கை இருந்தது. முத்து வடுகநாதன் மாண்ட பின்னும் தங்கள் அரசியைக் காப்பாற்றி மறைமுகமான புரட்சி வேலைகள் மூலம் நாட்டின் அரசுரிமையை வேலு நாச்சிக்கே உரிமையாக்கிய வீர சகோதரர்கள் மீது மறவர் மக்களுக்கு இருந்த பற்று எல்லையற்ற நிலைக்கு வளர்ந்து கொண்டே போயிற்று. சிவகங்கைச் சீமையின் அரசுரிமையைப் பற்றி இடை இடையே நிகழ்ந்த சிறு சிறு மாறுதல்கள் எல்லாம் ஒரு வகையாகத் தீர்ந்த பின் மருது சகோதரர்களே அச்சீமையின் அரசுரிமையை ஏற்றுக் கொண்டார்கள். சிறப்பாக, சின்ன மருதுவே சிவகங்கைச் சீமையின் நிருவாகப் பொறுப்பை மேற்கொண்டான். இதில் எவ்விதமான ஒளிவும் மறைவும் இல்லை.
நாட்டு மக்களும் கம்பெனி அதிகாரிகளும் இவ்வுண்மையை நன்று அறிவார்கள். இன்னும் தெளிவாகச் சொன்னால், நாட்டின் திறைப்பணம், வரவு செலவுக் கணக்குகளெல்லாம் வேலு நாச்சி உயிரோடு இருந்த போதே மருது பாண்டியர் பெயராலேயே அரசாங்கக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டனவாம். இவ்வாறு சிறுகச் சிறுகச் சிவகங்கைச் சீமையின் ஆதிக்கத்தைக் கைப்பற்றி வந்த மருது பாண்டியர்கள், 1800 ஆம் ஆண்டில் வேலு நாச்சி இறந்து போனதும் எவ்விதமான தடையும் இன்றிச் சிவகங்கைச் சீமையின் நேரடி நிருவாகத்தைத் தாங்களே ஏற்று நடத்தலானார்கள். இந்நிலையிலேதான் வீரபாண்டியன் ஈடுபட்டு நடத்திய விடுதலைப் போரைத் தொடர்ந்து நடத்திய மாவீரன் ஊமைத்துரை மீண்டும் பாஞ்சைப் பதியைத் துறந்து வாளும் கையுமாய்த் தன் உயிர் நண்பர்கள் புடை சூழச் சிவகங்கைச் சீமைக்கு வந்து சேர்ந்தான்.
வீரபாண்டியக் கட்டபொம்மன் மீது தலை நாள் தொட்டே மருது பாண்டியர்க்கு மிக்க அன்பும் மதிப்பும் இருந்து வந்தன. சற்றேறக்குறைய ஒன்றரை ஆண்டுகளும் எண்பது நாள்களும் நடந்த பாஞ்சைப் பதியின் விடுதலைப் போரில் தம்மால் இயன்ற வரை எல்லா உதவிகளையும் எப்போதும் செய்து வந்தனர் மருது பாண்டியர். இடுக்கண் வந்த போது இவ்வாறு மருது பாண்டியர் செய்த உதவிகளை ஊமைத்துரையின் நன்றி உணர்ச்சி நிறைந்த உள்ளம் மறக்க இயலுமோ? எனவே, தம் அன்பிற்கும் நம்பிக்கைக்கும் உரிய மருது பாண்டியர்களின் துணை கொண்டு பிறநாட்டு வெள்ளையரின் ஆதிக்கத்தை நாசமாக்க உறுதி கொண்டனர் ஊமைத்துரையும் அவன் உயிர்த் தோழரும். இந்நிலையில் சிவகங்கைச் சீமையை ஆண்ட மருது பாண்டியர் மனத்தை நெருப்பாக்கிற்று ஆணவம் பிடித்த ஆங்கிலக் கம்பெனிப் படையின் வெறி பிடித்த நெறியற்ற போக்கு.
சிவகங்கைச் சீமையின் அரசுரிமையை மருது பாண்டியரிடமிருந்து பிடுங்க, நவாபுவும் கம்பெனி அதிகாரிகளும் சேர்ந்து, ‘ஒழுங்காகக் கப்பம் கட்டுவதில்லை’ என்ற காரணம் காட்டிச் சதி செய்தார்கள்; மிரட்டினார்கள்; “வீரன் ஊமைத்துரை உயிரோடு தப்பிவிட்டான்; அவன் உள்ள வரை நமக்கு அமைதி ஏது? காற்றோடு தீயும் கலந்தாற்போல மருது பாண்டியரோடு சேர்ந்து கொண்டு, அவன் மாபெரும் போரைத் தொடங்குவதற்கு முன்பே நாம் சிவகங்கையைத் தாக்க வேண்டும்’, என்று சிந்தித்துத் திட்டமிட்டார்கள். இதை அறிந்த மருது பாண்டியரும் ஊமைத்துரை மீது பேரன்பு படைத்த வீர மறவர்களும் திரண்டு எழுந்தார்கள்; ‘பரதேசிக் கூட்டத்திற்கு இவ்வளவு மமதையா! எங்கள் அருமை அரசன் முத்து வடுகனைக் கொன்ற வெள்ளைக்கூட்டத்தை இன்னும் உயிரோடு உலாவ விடுவதா?’ என்று ஆத்திரம் கொண்டார்கள்.
வீர வெறியால், “அருமைச் சிவகங்கைச் சீமையின் உரிமையை இனி எக்காரணத்தாலும் பறி கொடுக்க இயலாது!’ என்று எழுச்சி கொண்டனர் மருது பாண்டியர். இந்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போலக் கம்பெனி அதிகாரிகள், “கப்பம் கப்பம்’ என்று மருது பாண்டியரை வற்புறுத்தலானார்கள். ஆனால், சிவகங்கைச் சீமையின் விடுதலை வீரர்களோ, ‘தலை போனாலும் சல்லிக்காசும் கப்பமாகத் தாரோம்!’ என்று கண்டிப்பாக கூறிவிட்டார்கள். மூண்டது போர். ஆம்! பேரரசு வெறிக்கும் விடுதலை வேட்கைக்கும் இடையே மூண்டது போர்!
சிவகங்கைச் சீமைக்கான விடுதலைப்போர் மூளும் நேரம் பார்த்து ஊமைத்துரையும் அவன் தோழர்களும் மருது பாண்டியர் நாட்டிற்கே வந்து சேர்ந்தார்கள். அவர்கள் உள்ளம் கொல்லன் உலை போலக் கொதித்துக் கொண்டிருந்தது. ‘பாஞ்சைப்பதிக் கோட்டையைத் தகர்த்ததோடு, அந்நிலப் பரப்பு முழுவதையும் உப்பையும் வரகையும் வாரி இறைத்து உழவும், ஆமணக்குச் செடிகளை நடவும் இந்தப் பறங்கிக் கூட்டத்திற்கு எவ்வளவு திமிர்! என்று எண்ணி ஊமைத்துரை உள்ளம் குமுறியது.
‘நான் நாடிழந்தாலும் நம்பிக்கையை இழக்கவில்லை. வீரபாண்டியன் தம்பிதான் நான் என்பதை உலகறியச் செய்வேன்! என்று அவ்வீரன் உறுதி பூண்டான். வெள்ளை வெறியர்களின் நெறி கெட்ட செயலைச் சுட்டுப் பொசுக்க உறுதி கொண்ட முப்பெருவீரரும் சிவகங்கைச் சீமையிலே சந்தித்தனர். சிங்கங்கள் ஒன்று கூடின. அவ்வீரச் சிங்கங்களின் கர்ச்சனையைக் கேட்டுக் கம்பெனிப் பட்டாளத்தின் குலை நடுங்கியது.