இலங்கைஇந்தியாசெய்திகள்

இந்திய எதிர்ப்புகளையும் மீறி இலங்கை அம்பன்தோட்டா துறைமுகம் வந்தது சீன உளவுக் கப்பல்

சீனாவின் ஆய்வு கப்பல் யுவான்வாங்-5, இலங்கையின் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.

சீனாவின் ஆய்வுக் கப்பல் யுவான் வாங் 5-ல் பல நவீன ரேடார்கள், ஆய்வுக் கருவிகள் உள்ளன. இது ராணுவத் தளங்கள், அணுமின்சக்தி நிலையங்கள் போன்றவற்றை கண்காணிக்கும் திறன் படைத்தது. இந்த கப்பல் இலங்கையில் சீனாவால் இயக்கப்படும் அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்துள்ளது. இது ஒருவார காலத்திற்கு அங்கே தங்குகிறது.

உளவு அபாயம்; இந்தியா கவலை: சீன கப்பல் இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டால், தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்கள் உளவு பார்க்கப்படும்; இந்திய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என எச்சரிக்கப்பட்டது. இதனால், இந்தியா இந்தக் கப்பலை அம்பன்தோட்டா துறைமுகத்தில் நிறுத்த அனுமதி மறுத்தது. இந்நிலையில் தான், இந்தக் கப்பல் இங்கு நிறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் இலங்கையோ சீனக் கப்பலுக்கு அனுமதி வழங்கியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. நன்றிக்கடனாகவும் செய்யப்படவில்லை. இது வழக்கமான நிகழ்வு என்று கூறியுள்ளது. ஏற்கெனவே இலங்கை ராணுவத் தரப்பில், ‘‘இந்தியா, ரஷ்யா, ஜப்பான் மற்றும் மலேசியா கடற்படை கப்பல்கள் அவ்வப்போது அம்பன்தோட்டா துறைமுகத்தில் எரிபொருள் மற்றும் இதர பொருட்களை நிரப்பிக் கொள்ள அனுமதி கேட்கும். அதுபோல் சீனாவின் யுவான் வாங்-5 கப்பலுக்கும் அனுமதி வழங்கியுள்ளோம்.

அணுசக்தி போர்க் கப்பலுக்குத்தான் நாங்கள் அனுமதி மறுக்கமுடியும். இது அணு சக்தி கப்பல் அல்ல. இந்தியப் பெருங்கடலில் கண்காணிப்பு மற்றும் நேவிகேஷன் பணிக்காக இந்தகப்பலை அனுப்புவதாக இலங்கையிடம் சீனா தெரிவித்துள்ளது. இந்த கப்பலின் வருகை குறித்து இந்தியா கவலைப்படுவதை இலங்கை புரிந்து கொள்கிறது. ஆனால் இது வழக்கமான நடைமுறை’’ என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேற்றே ஒப்படைக்கப்பட்ட டோர்னியர் உளவு விமானம்: யுவான் வாங்-5 என்கிற சீனாவின் உளவுக் கப்பல், இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தில் 1 வாரம் நிறுத்தப்படுவதற்காக வருவதற்கு முதல்நாள் இந்த விமானம் இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கை இடையிலான பாதுகாப்பு தொடர்பான பேச்சுவார்த்தை கடந்த 2018 ஜனவரியில் நடந்த போது, இலங்கையின் கடல்சார் கண்காணிப்பு திறன்களை மேம்படுத்துவதற்காக 2 டோர்னியர் உளவு விமானங்களை அந்நாடு கோரியது. இதன் அடிப்படையில் ஒரு டோர்னியர் விமானத்தை இலங்கைக்கு இந்தியா நேற்று வழங்கியது.

இதற்கான நிகழ்ச்சி, கொழும்பு விமான நிலையத்தை அடுத்துள்ள கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றது. இதில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, இந்திய கடற்படை துணைத் தளபதி எஸ்.என்.கோர்மேட், கொழும்பில் உள்ள இந்தியத் தூதர் கோபால் பாக்லே உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button