இலங்கையில் நேற்றிரவு இந்திய விசா மைய அதிகாரி மீது சில அடையாளம் தெரியாதோர் நடத்திய தாக்குதலில் அவர் காயமடைந்தார். இதனைடுத்து இலங்கை வாழ் இந்தியர்கள் அங்குள்ள நிலைமையை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல் ஒருவேளை வெளியேற திட்டமிட்டால் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பியோடிவிட்டு சிங்கப்பூரில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவைத்தார்.
கோத்தபய ராஜபக்ச தப்பிச் செல்ல இந்தியா உதவியதாக இலங்கையில் போராட்டக்காரர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் தான் இந்திய தூதரக அதிகாரி மீது அடையாளம் தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி விவேக் வர்மாவை இந்திய அதிகாரிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
இந்நிலையில் இலங்கையில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “இந்திய விசா மையத்தின் இயக்குநரான அதிகாரி விவேக் வர்மா தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மற்ற அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்தனர். இலங்கையில் உள்ள இந்தியர்கள் நிலவரத்தை புரிந்து கொள்ள வேண்டும். நாட்டைவிட்டு வெளியேற விரும்புபவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.