மத்தியப் பிரதேசத்தின் நகராட்சித் தேர்தலில் முதன்முறையாக தென் மாநில முஸ்லிம் கட்சிகள் கால் பதித்துள்ளன. அசாதுதீன் ஒவைசியின் ஏஐஎம்ஐஎம், பாப்புலர் ஃப்ரன்ட ஆஃப் இந்தியாவின் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் தலா மூன்று நகராட்சி வார்டுகளில் வென்றுள்ளன.
மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 255 நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் நேற்று முதல் வெளியாகத் தொடங்கி உள்ளன. இதுவரை வெளியான முடிவுகள் ம.பியில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் ஓரிரு வேட்பாளர்கள் வித்தியாசத்தில் நகராட்சி வார்டுகளை கைப்பற்றி வருகின்றனர். தற்போதுள்ள நிலவரப்படி சுமார் 100 நகராட்சிகளில் தலைவர் பதவிகளை பாஜகவும், காங்கிரஸும் சுயேச்சை மற்றும் சிறிய கட்சிகள் ஆதரவுகள் இன்றி கைப்பற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தென் மாநிலங்களான தெலங்கானா, தெலங்கானா மற்றும் கேரளாவில் உருவான முஸ்லிம் கட்சிகள் மத்தியப் பிரதேச நகராட்சிகளில் முதன்முறையாகக் கால் பதித்துள்ளன. ஹைதராபாத் எம்.பியான அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லீஸ்-எ-இத்தஹாதுல் முஸ்லிமின் (ஏஐஎம்ஐஎம்), கர்கோன் நகரின் மூன்று வார்டுகளை கைப்பற்றியுள்ளது.
கர்கோனின் பெரும்பாலான வார்டுகளில் பாஜக வெல்ல, காங்கிரஸ் வெறும் 4 மற்றும் சுயேச்சைகள் 7 இடங்களில் வென்றுள்ளன.
ஸ்லிம் கட்சியான ஏஐஎம்ஐஎம் பெற்ற மூன்று வார்டுகளில் ஒன்றில் இந்து பெண்ணான அருணா ஷியாம் உபாத்யா போட்டியிட்டு வென்றுள்ளார். மற்ற இரண்டு வார்டுகளில் முஸ்லிம் வேட்பாளர்களான ஷகீல் கான், ஷப்னம் அதீப் வெற்றி பெற்றுள்ளனர். இதன்மூலம், கர்கோன் மாவட்டம் அமைந்த மத்தியப் பிரதேசத்தின் நிமர் பிராந்தியத்தில் ஒவைஸி கட்சியின் ஆதிக்கம் வலுக்கத் தொடங்கி விட்டதாகக் கருதப்படுகிறது. இதற்கு முன் ஆந்திராவை விட்டு முதன்முறையாக மகராஷ்டிராவின் சட்டப்பேரவை மற்றும் நகராட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு சில இடங்களை கைப்பற்றியது. பிறகு பிஹார் மற்றும் உத்தரப் பிரதேசத்துக்குப் பின் தற்போது மத்தியப் பிரதேசத்தில் நுழைந்துள்ளது ஏஐஎம்ஐஎம் கட்சி.
இதே வகையில், கேரளாவில் உருவாகி நாட்டின் பல முக்கிய மாநிலங்களில் பரவியுள்ள முஸ்லிம் அமைப்பான பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் அரசியல் பிரிவான சமூக ஜனநாயக இந்தியக் கட்சியும் (எஸ்டிபிஐ) மூன்று வார்டுகளில் வென்றுள்ளது. டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்டிபிஐ, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் செல்வாக்கை ஈட்டி வருகிறது. இக்கட்சியினர் நீமச் நகரின் 2-இல் பாஜகவையும், இந்தோரின் ஒரு வார்டில் காங்கிரஸையும் தோற்கடித்துள்ளது.
இந்த நகராட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டாம் எனவும், இதனால் வாக்குகள் பிரிந்து பாஜகவிற்கு சாதகமாகி விடும் என எஸ்டிபிஐயினரை காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. இதற்கு மறுத்துவிட்ட எஸ்டிபிஐ போட்டியில் இறங்கியுள்ளது. குறிப்பாக நீமச் நகரில் கடந்த மே மாதம் மதக் கலவரம் மூண்டிருந்தது. இங்குள்ள முஸ்லிம்கள் நம்பிக்கைக்குரிய இடத்தில் ஹனுமன் சிலை வைக்க நடந்த முயற்சி காரணமானது.
பாஜக முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் ஆளும் மத்தியப் பிரதேசத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் வரவிருக்கிறது. இதற்கு முன்பாக நகராட்சித் தேர்தலில் பாஜகவிற்கான சறுக்கல், அக்கட்சியின் தலைவர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. முதன்முறையாக முஸ்லிம் கட்சிகள் மத்தியப் பிரதேசத்தில் தடம் பதிக்கத் துவங்கி இருப்பதும் பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாகிவிட்டது. இதனால், பாஜகவின் தேசிய தலைவர்கள் மத்தியப் பிரதேச அரசியல் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தத் தயாராகி வருகின்றனர்.