Site icon ழகரம்

சிங்காநல்லூர், மேட்டுப்பாளையம் சாலை உட்பட கோவையில் 4 இடங்களில் புதிய மேம்பாலங்கள்

கோவையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேலும் 4 இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளதாக மத்திய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.

கோவையில் வாகன பெருக்கம் காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கிறது. நெரிசலை தவிர்க்க திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டன. அவிநாசி சாலை, உக்கடம்- பொள்ளாச்சி சாலையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

தற்போது, போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள மூன்று இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பிலும், ஓரிடத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பிலும் புதிதாக மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. அதன்படி, சிங்காநல்லூர் சந்திப்பு, என்.எஸ்.ஆர் சாலை – சிவானந்தா காலனி சாலை சந்திப்பு, சரவணம்பட்டி – காளப்பட்டி சாலை ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கோவைப்பிரிவு உயர் அதிகாரி ஒருவர் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘சிங்காநல்லூர் சந்திப்பில் ஒண்டிப்புதூர்-ராமநாதபுரம் வழித்தடத்தில் ரூ.141 கோடி மதிப்பில் 2.4 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது. சாந்தி சோஷியல் சர்வீஸ் அருகிலிருந்து உழவர் சந்தை வரை இம்மேம்பாலம் கட்டப்படும்.

மேட்டுப்பாளையம் சாலையில் என்.எஸ்.ஆர் சாலை பிரிவு சந்திப்பு அருகிலிருந்து சிவானந்தாகாலனி செல்ல திரும்பும் சாலை வரை 2 சிக்னல்கள் உள்ளன. இப்பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் 900 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

என்.எஸ்.ஆர் சாலை பிரிவிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை இம்மேம்பாலம் கட்டப்படும். சத்தி சாலையில் சரவணம்பட்டி-காளப்பட்டி சாலை சந்திப்புப் பகுதியில் ரூ.80 கோடி மதிப்பில் 1.40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட உள்ளது.

இந்த 3 மேம்பாலங்களை கட்ட நிலம் கையகப்படுத்த தேவையில்லை. தற்போதைய இடத்திலேயே கட்ட முடியும். இந்த 3 மேம்பாலங்களும் 4 வழிப்பாதையாக, 17.2 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனங்கள் பரிசீலனையில் உள்ளன. ஆகஸ்ட் மாதம் கட்டுமானப் பணிகள் தொடங்க வாய்ப்புள்ளது,’’ என்றனர்.

லாலி சாலை சந்திப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் தடாகம் சாலை – மருதமலை சாலையைஇணைக்கும் லாலி சாலை சந்திப்பு பகுதியில் தினமும் ‘பீக் ஹவர்ஸ்’ நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மாநில நெடுஞ்சாலைத் துறை அதிகாரி கூறும்போது,‘‘லாலி சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்ட 3 மாதிரிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அரசிடம் ஒப்புதல் பெற்ற பின்னர், வடிவம் இறுதி செய்யப்பட்டு, மதிப்பீடு நிர்ணயித்து, நிலம் கையகப்படுத்தப் பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்றார்.

Exit mobile version