Site icon ழகரம்

இஸ்லாமியரின் கடையை தாக்கிய ஸ்ரீராம சேனை: ‘கன்னடர்களை பாஜக தலைகுனிய வைக்கிறது’ – சித்தராமையா

ர்நாடக மாநிலம் தார்வாட்டில் இஸ்லாமிய வியாபாரி ஒருவரின் கடைமீது தாக்குதல் நடத்திய வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது. அவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது.

பசவராஜ் பொம்மை இன்னும் கர்நாடக முதலமைச்சராகதான் இருக்கிறார் என்றால், தார்வாட்டில் இஸ்லாமிய வியாபாரிகளின் கடைகளை அடித்து நொறுக்கிய ஸ்ரீராம சேனை அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா கூறியுள்ளார்.

“பொம்மையால் இதைச் செய்ய இயலாது என்றால், கர்நாடக நலனுக்காக தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்வது நல்லது” என்று சித்தராமையா ட்வீட் செய்துள்ளார்.

மேலும், “ஸ்ரீராம சேனை உறுப்பினர்களின் தாக்குதல் இஸ்லாமிய வியாபாரிகள் மீதான தாக்குதல் மட்டுமல்ல, தர்பூசணி பயிரிடும் விவசாயிகள் மீதான தாக்குதலும் கூட. கர்நாடகம் மாநிலமானது பொது அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கு பெயர் பெற்றது. கன்னடர்கள் அதில் பெருமை கொள்கிறார்கள். சங்பரிவாரும் பாஜகவும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் உலகம் முழுவதும் உள்ள கன்னடர்களை தலைகுணிய வைத்துள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் உள்ள தார்வாட் மாவட்டத்தில் உள்ள நுக்கேகேரி அனுமன் கோயிலுக்கு அருகே இஸ்லாமிய வியாபாரிக்குச் சொந்தமான தர்பூசணி பழங்களையும் கடைகளையும் வலதுசாரி அமைப்புகள் உடைத்து அழித்தன.

இஸ்லாமிய வியாபாரிகளின் தள்ளுவண்டிகளில் இருந்த தர்பூசணி பழங்களைச் சேதப்படுத்தியதோடு 4 தள்ளுவண்டிகளையும் வலதுசாரி அமைப்பினர் உடைத்துள்ளனர். பின்னர் இந்துத்துவ வலதுசாரி அமைப்பினருக்கும் இஸ்லாமிய வியாபாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பிறகு அங்கு வந்த காவல்துறையினர் நிலைமையைக் கட்டுப்படுத்தி, பழங்களைச் சேதப்படுத்திய வலதுசாரி உறுப்பினர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

Exit mobile version