உத்தர பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவின் சித்தப்பாவான ஷிவ்பால் சிங் யாதவ், தனது கட்சி நிர்வாகக் குழுக்களை கலைத்துள்ளார். இதனால் அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கவிருப்பதாக தகவல் பரவியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவின் சகோதரர் ஷிவ்பால் சிங் யாதவ். சமாஜ்வாதி கட்சியின் தலைவராக முலாயம் சிங்கின் மகன் அகிலேஷ் அமர்ந்தவுடன் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியை விட்டு ஷிவ்பால் விலகினார்.
பிறகு தனியாக பிரகதிஷீல் சமாஜ்வாதி பார்ட்டி லோகியா (பிஎஸ்பிஎல்) என்ற கட்சியை தொடங்கினார்.
2019 மக்களவைத் தேர்தலில் இவர் தனித்துப் போட்டியிட்டார். இதனால், உ.பி.யில் கணிசமாக உள்ள யாதவர் வாக்குகள் பிரிந்ததால், சமாஜ்வாதி, பிஎஸ்பிஎல் ஆகிய இரு கட்சிகளுக்கும் பெரும் இழப்பு ஏற்பட்டது.
இதனால், சமீபத்திய உ.பி. பேரவை தேர்தலில் அகிலேஷ் தலைமையிலான கூட்டணியில் ஷிவ்பால் இணைந்து போட்டியிட்டார். அப்போது தனது மகன் ஆதித்யா யாதவ் உள்ளிட்ட 100 பேருக்கு அகிலேஷிடம் வாய்ப்பு கேட்டிருந்தார். ஆனால் ஷிவ்பாலுக்கு மட்டும் தனது சைக்கிள் சின்னத்தில் போட்டியிட அகிலேஷ் வாய்ப்பளித்தார்.
இதையடுத்து மார்ச் 10-ல்வெளியான தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு உ.பி.யில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைத்தது. சமாஜ்வாதிக்கு 111 தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதையடுத்து அந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகள் இடையே அகிலேஷ் மீது அதிருப்தி கிளம்பியது. இதில், முதல் நபராக அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால் சிங் பாஜக பக்கம் சாயத் தொடங்கினார்.
இதன் முதல்கட்டமாக தனது பிஎஸ்பிஎல் கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் குழு உட்பட அனைத்து நிர்வாக குழுக்களையும் நேற்று கலைத்து உத்தரவிட்டார். இதனால், அவர் தனது கட்சியை பாஜகவுடன் இணைக்கப் போவதாக சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
முன்னதாக ஷிவ்பால், பாஜகவின் இந்துத்துவா கொள்கையில் முக்கியமான பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவாக கருத்து கூறியிருந்தார். இதுவும் அவர் பாஜகவுடன் சேர்வதை உறுதிப்படுத்துவதாக உள்ளது. ஷிவ்பால் தனது மகன் ஆதித்யாவின் அரசியல் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இம்முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அகிலேஷுடனான இந்த மோதலால் தற்போது முடிந்த உ.பி. மேல்சபை தேர்தலில் 36 எம்எல்சி இடங்களில் சமாஜ்வாதி ஒன்றில்கூட வெற்றி பெறவில்லை. இந்தச்சூழலில், சமாஜ்வாதியின் மற்றொரு பலம் வாய்ந்த தலைவரான ஆஸம்கானின் ஆதரவாளர்களும், அகிலேஷுடன் அதிருப்தி காட்டத் தொடங்கியுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக சிறையில் வாடும் ஆஸம்கானை, ஒரே ஒருமுறை மட்டுமே அகிலேஷ் சிறையில் சந்தித்துள்ளதாக இவர்கள் புகார் கூறியுள்ளனர். இப்பிரச்சினையில், அகிலேஷ், ஆஸம்கான், ஷிவ்பால் ஆகிய மூவருமே நேரடியாக கருத்து கூறுவதை தவிர்த்து வருகின்றனர்.