சென்னை ஐஐடி மாணவி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முன்னாள் ஆராய்ச்சி மாணவர் நேரில் ஆஜராகும்படி சென்னை போலீஸார் சம்மன் அனுப்பி உள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவர் கடந்த 2017-ல் சென்னை ஐஐடி-ல் படித்து வந்தார். இந்நிலையில், இவர் தன்னுடன் படித்த ஆராய்ச்சி மாணவர்கள் சிலர், தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டினார். குறிப்பாக, தன்னுடன்பயின்ற மாணவர் கிங்சோ தேப்சர்மா, சுபதீப் பானர்ஜி உள்ளிட்ட 8 மாணவர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக பேராசிரியர்களிடம் புகார் தெரிவித்திருந்தார்.
ஆனால், சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மன வேதனையடைந்த மாணவி, 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், பாலியல் வன்கொடுமை தொடர்பாக மாணவி தரப்பில் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
போலீஸார் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக 8 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். ஆனால், புகார் அளித்து 9 மாதங்களாகியும் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 22-ம் தேதி மகளிர் ஆணையத்தலைவரை சந்தித்த மாணவி, இதுகுறித்து புகார் அளித்தார். இதன் தொடர்ச்சியாக, மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் தலைமையிலான தனிப் படையினர், பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்களைத் தேடி மேற்குவங்கம் விரைந்தனர்.
அங்கு தலைமறைவாக இருந்தமுன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தேப்சர்மா கைது செய்யப்பட்டார். அங்குள்ள டைமண்ட் ஹார்பர் காவல் நிலையத்தில் அவரிடம் விசாரித்தனர். நேற்று முன்தினம் அவரை உள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னைக்கு அழைத்து வரும் ஏற்பாடுகளில் போலீஸார் ஈடுபட்டனர்.
ஆனால், கிங்சோ தேப் சர்மா ஏற்கெனவே இந்த வழக்கில் முன்ஜாமீன் வாங்கியதற்கான உத்தரவைக் காண்பித்தார். இதனால் அம்மாநில நீதிமன்றம் அவரை விடுவித்துள்ளது. இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகும்படி போலீஸார்அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.