கோயம்போடு வணிக வளாகத்தில் காய்கறிகள் வீணாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் குளிர்சாதன கிடங்கு அமைத்துத் தரவும், காய்கறிகளை குறைந்த விலையில் மக்களிடையே சேர்க்கவும், வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படுவதை உறுதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: “நுகர்வோரின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், தரமான பொருட்கள் மற்றும் சேவைகள் தங்கு தடையின்றி நியாயமான விலையில் நுகர்வோர்களுக்கு கிடைக்கப் பெறுவதையும், நுகர்வோர் நலன்களுக்கான திட்டங்கள் மேம்படுத்தப்படுவதையும், அழுகும் பொருட்கள் வீணடிக்கப்படுவது தவிர்க்கப்படுவதையும் கண்காணிக்கும் பொறுப்பும், கடமையும் மாநில அரசிற்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது.
கடந்த ஒரு வார காலமாக ஐந்து டன் எடை கொண்ட நல்ல காய்கறிகள் கோயம்பேடு சந்தை வளாகத்திலுள்ள திறந்த வெளியில் கொட்டி கிடப்பதாகவும், இதற்குக் காரணம் கூடுதல் வரத்து மற்றும் குளிர்சாதன வசதி இல்லாதது என்றும், தற்போதுள்ள உணவுப் பொருள் கிடங்கினை குளிர்சாதன வசதி கொண்ட கிடங்காக மாற்றுவது குறித்து அரசாங்கத்தினை அணுகி இருப்பதாகவும், 30 டன் திறன் கொண்ட காய்கறி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆலையை உயிர்பிப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் பத்திரிகையில் செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து அங்கீகரிக்கப்பட்ட கோயம்பேடு சந்தை வியாபாரிகள் சங்கத்தைக் கேட்டபோது, ஒரு நாளைக்கு 50 லாரிகளில் கூடுதலாக காய்கறிகள் வருவதாகவும், அவை அனைத்தையும் விற்பனை செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த கோயம்போடு சிறு வியாபாரிகள் நலச் சங்கம், காய்கறிகளின் விலை உயர்ந்தால், காய்கறிகளை வியாபாரிகளிடமிருந்து வாங்கி அவற்றை குறைந்த விலையில் நுகர்வோருக்கு கிடைக்க அரசு நடவடிக்கை எடுப்பதாகவும், இதேபோன்று விலை குறையும்போதும் காய்கறிகளை வியாபாரிகளிடமிருந்து வாங்குவதற்கான திட்டத்தை அரசு வகுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.
இதுகுறித்து சந்தை மேலாண்மைக் குழு அதிகாரியிடம் கேட்டபோது, நல்ல தரமான காய்கறிகள் குப்பை போல் கொட்டப்படுவது நன்கு தெரியும் என்றும், இதுபோன்ற தருணத்தில் காய்கறிகளை ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களுக்கு தருவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும், விலை குறைந்ததன் காரணமாக காய்கறிகள் வீணடிக்கப்படுவதில்லை என்றும், சில வியாபாரிகள் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதாகவும், வீணடிப்பு பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை என்றும் தெரிவித்து இருக்கிறார்.
நல்ல தரமான காய்கறிகள் யாருக்கும் பயனில்லாமல் வீணடிக்கப்படுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இதுபோன்ற காய்கறிகளை சேமித்துக் கொள்ள ஏதுவாக குளிர்சாதன கிடங்கு ஒன்றினை கோயம்பேடு வணிக வளாகத்திற்குள் ஏற்படுத்தவும், அதிக வரத்து காரணமாக குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும்போது அதனை அரசே கொள்முதல் செய்து சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு எடுத்துச் சென்று மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டுமென்ற எதிர்பார்ப்பு காய்கறி மொத்த விற்பனையாளர்களிடையேயும், சிறு விற்பனையாளர்களிடையேயும், நுகர்வோர்களிடையேயும் தற்போது உள்ளது. இதுபோன்ற அரசின் நடவடிக்கை அனைவருக்கும் பயனளிப்பதாக அமையும்.
எனவே, தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, கோயம்போடு வணிக வளாகத்தில் காய்கறிகள் வீணாக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் குளிர்சாதன கிடங்கு அமைத்துத் தரவும், காய்கறிகளை குறைந்த விலையில் மக்களிடையே சேர்க்கவும், வியாபாரிகளுக்கு லாபம் ஏற்படுவதை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுகவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.