தமிழை அர்ச்சனை மொழியாக்க கருத்தரங்கம்
“தமிழே அர்ச்சனை மொழி! தமிழரே அர்ச்சகர்!” என்ற தலைப்பில், வரும் 12.10.2022 அன்று சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகிறது.
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆவதற்குத் தடை விதிக்கும் வகையில் அண்மையில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்துள்ளது. இத்தீர்ப்பிலுள்ள பாதங்களை விளக்கியும், தமிழ்நாட்டின் அர்ச்சனை மொழி சமற்கிருதமாக ஒருபோதும் இருக்கக் கூடாது – தெய்வத் தமிழ்தான் தமிழ்நாட்டின் அர்ச்சனை மொழி என வலியுறுத்தியும் தெய்வத் தமிழ்ப் பேரவை மற்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் பரப்புரைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, சென்னையில் சிறப்புக் கருத்தரங்கம் வரும் அக்டோபர் 12 அன்று நடைபெறுகிறது.
சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் அரங்கத்தில் 12.10.2022 – அறிவன் (புதன்) கிழமை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் இச்சிறப்புக் கருத்தரங்கத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச்செயலாளர் க. அருணபாரதி தலைமை தாங்குகிறார். தென்சென்னை த.தே.பே. செயலாளர் ஏ. பிரகாசு பாரதி வரவேற்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் இரா. இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் மு. வடிவேலன், ஆவடி செயலாளர் வ. சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தெய்வத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளருமான பெ. மணியரசன், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் “சிகரம்” ச. செந்தில்நாதன், இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத் தலைவர் தமிழ்த்திரு. சித்தர் மூங்கிலடியார், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் தமிழ்த்திரு. சிவ. வடிவேலன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பே. திருவள்ளூர் கிளைச் செயலாளர் செயப்பிரகாசு நன்றி உரையாற்றுகிறார்..