தமிழகத்தில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வரும் ஜூன் 13-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும், 12-ம் வகுப்பிற்கு ஜூன் 20-ம் தேதியும், 11-ம் வகுப்பிற்கு ஜூன் 27-ம் தேதியும் பள்ளிகள் தொடங்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார்.
சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “தமிழக முதல்வர் ஆணைக்கினங்க, இணையவழி தொடக்க நிகழ்ச்சி, மற்றும் 2022-23 கல்வியாண்டு நாட்காட்டி மற்றும் ஆசிரியர் திறன் மேம்பாட்டுத் திட்ட நாட்காட்டி வெளியிடுதல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கல்வித்துறை சார்ந்த அதிகாரிகள் அனைவரும் கலந்துகொண்டனர்.
பொதுமக்களுக்கான இணையவழி சேவைகள், 25 வகையான சான்றிதழ்களை, மக்கள் நேரடியாக விண்ணப்பித்து பெற வேண்டிய அவசியம் இல்லாமல், எளிமையான முறையில் பெறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மின்பதிவேடுகள் இல்லாமல் இருந்தபோது ஆசிரியர்கள் 100-க்கும் மேற்பட்ட ரிஜிஸ்டர்களை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. இதனை எளிமையாக்க பணி பயன் செயலி, கல்வியாண்டிற்கான நாட்காட்டி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
வரும் ஜூன் மாதம் 13-ம் தேதி 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பிற்கு பள்ளிகள் திறக்கப்படும். ஜூன் 20-ம் தேதி பனிரெண்டாம் வகுப்பிற்கும், ஜூன் 27-ம் தேதி முதல் 11-ம் வகுப்புகள் தொடங்கப்படும்.
இதுதவிர மாணவர்கள், இணையம் வாயிலாக அடுத்த ஆண்டு பள்ளி திறப்பு, காலாண்டு அரையாண்டு தேர்வு எப்போது என்பதை பார்த்துக்கொள்ள முடியும். அதேபோல் விடுமுறை தினங்கள் எப்போது என்ற விவரங்களும் அதில் உள்ளன” என்று கூறினார்.