கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி உயிரிழப்பு தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி: பள்ளி நிர்வாகமோ, மாவட்ட நிர்வாகமோ, அரசு சார்பிலோ இதுவரை உயிரிழந்த மாணவியின் தாயாரை சந்தித்து ஆறுதல் கூறவில்லை. அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் செயலிழந்து இருக்கிறது. இதனால் அவரது உறவினர்கள், நண்பர்கள் கொதித்து எழுந்துள்ளதால் அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு முழு காரணம் முதல்வர் மு.க.ஸ்டாலின்தான். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. உளவுத்துறை செயலற்ற நிலையில் இருக்கிறது. விசாரணை முடியாத போதே எப்படி பள்ளி நிர்வாகத்துக்கும், இந்த சம்பவத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று டிஜிபி சொல்ல முடியும்? இந்த ஆட்சியில் பெண்களுக்கு, மாணவிகளுக்கு பாதுகாப்பு கிடையாதுஎன்றார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்: மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. மாணவி மரணத்தின் பின்னணியை ஆய்வு செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை: மக்கள், திமுக அரசின் மீது நம்பிக்கையும், காவல் துறையின் மீது மரியாதையும் இழந்து விட்டனர். காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களின் செயல்பாடுகள் அனைத்தும் திறனற்ற அரசின் வெளிப்பாடாகவே தெரிகிறது. தவறு யார் செய்திருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்: கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தை காரணம் காட்டி பொதுமக்கள், மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதை தவிர்க்க வேண்டும். மாணவியின் மரணத்தில் நியாயமான முறையில் விசாரணை நடத்தி காரணமானவர்களை கடுமையாக தண்டிக்க வேஎண்டும். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கிட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்: தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காணாமல், நிலைமை இந்த அளவுக்கு மோசமடைய காவல் துறையின் அலட்சியம் தான் காரணம்.
தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: காவல் துறை உரிய விசாரணை நடத்தி, மாணவியின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், மாணவியின் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணத்தை தமிழக அரசு வழங்க வேண்டும்.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: மாணவி உயிரிழந்த பிரச்சினையை திமுக அரசு சரியான முறையில் கையாளாததால் அந்த பகுதியில் வன்முறை வெடித்துள்ளது.
பாஜக விவசாய அணி மாநில தலைவர் ஜி.கே.நாகராஜன்: காவல்துறை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து திட்டமிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளியின் வாகனங்களை தீக்கிரையாக்கியதோடு காவலர்களை தாக்கியவர்களை, பொதுமக்கள் என்று அடையாளப்படுத்தி அமைதி காக்க வேண்டும், போராட்டத்தை கைவிட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது.
மரணமடைந்த மாணவியின் பெற்றோரோ, உறவினர்களோ இப்போராட்டத்தில் கலந்துகொள்ளாதபோது, முதல்வரின் இத்தகைய அறிக்கை போராட்டக்காரர்களை காப்பாற்றும் செயலாகவும், உண்மையை மூடி மறைக்கும் செயலாகவே உள்ளது.
இது திட்டமிட்டு தீட்டப்பட்ட சதி. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.